×

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர், காகித கூழ் தொப்பி: போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வழங்கினார்

சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர், போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கும் திட்டத்தை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் தொடங்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை போக்குவரத்து காவலர்களின் தாகத்தை தணிக்க போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு 2012ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான்கு மாதங்கள் ஆவின் மோர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவின்பேரில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் நேற்று காலை, மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை சந்திப்பில், கோடை வெயிலை சமாளிப்பதற்காக போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் பாக்கெட் மற்றும் காகித கூழ் தொப்பி வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆவின் மோர் வழங்கும் திட்டத்திற்கு ஒரு மோர் பாக்கெட் ரூ.6.33 வீதம் நாளொன்றுக்கு 4,970 மோர் பாக்கெட்டுகள் என ரூ.31,460.10ம், 121 நாட்களுக்கு ரூ.38,38,132 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கு மோர் காலை மாலை என இருவேளையும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் இணை ஆணையர்கள் மகேஷ் குமார், தேவராணி, போக்குவரத்து காவல் துணை ஆணையர் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு, போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

 

The post போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு மோர், காகித கூழ் தொப்பி: போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Sudhakar ,CHENNAI ,Traffic Police ,Traffic ,Commissioner ,Dinakaran ,
× RELATED ரூ.4.8 கோடி பறிமுதல்: பாஜக வேட்பாளர் மீது வழக்கு