×

அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி: வன விலங்குகளை கண்டு ரசித்தார்

காசிரங்கா: அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் பிரதமர் மோடி, யானை மற்றும் ஜீப் சவாரி செய்து, வன விலங்குகளை கண்டு ரசித்தார். அசாம் மாநிலத்தில் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி நேற்று அதிகாலை காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணலாயத்தை சுற்றிப் பார்த்தார். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றான உலகப் புகழ் பெற்ற காசிரங்காவிற்கு பிரதமர் மோடி சென்றது இதுவே முதல் முறை.

முதலில் மிஹிமுக் பகுதியில் இருந்து பிரத்யும்னா என்ற யானை மீது அமர்ந்து பிரமதர் மோடி சவாரி செய்தார். அதைத் தொடர்ந்து, ஜீப் சவாரி செய்த பிரதமர் மோடி பூங்காவில் உள்ள ஒற்றை காண்டாமிருகம், மான், காட்டு மாடு, நரி உள்ளிட்ட பல அரிய வன விலங்குகள், பறவைகளை கண்டு ரசித்தார். சுமார் 2 மணி நேரம் பூங்காவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி பின்னர் 3 யானைகளுக்கு கரும்புகளை தந்தார். பிரதமர் மோடியின் வருகைக்காக காசிரங்கா பூங்காவில் கடந்த 7ம் தேதி முதல் பொதுமக்கள் யானை, ஜீப் சவாரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டனர்.

மீண்டும் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைத் தொடர்ந்து, மெலெங் மெட்டெலி போத்தாருக்கு சென்ற பிரதமர் மோடி ரூ.18,000 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில், 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான சேலா இரட்டை வழி சுரங்கப்பாதையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ரூ.825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, சீனாவை ஒட்டிய அசல் கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஏசி) அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

* மணிப்பூர் செல்லாதது ஏன்?
பாஜ ஆட்சியில்தான் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தன என பிரதமர் மோடி நேற்று மீண்டும் கூறிய நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், ‘‘அருணாச்சல் எல்லையில் சீனா ஆக்கிரமித்த பிறகு பழைய நிலைமையை மீட்டெடுக்க ஒன்றிய பாஜ அரசு தவறி விட்டது. பாஜ ஆட்சியில் வடகிழக்கின் பல பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் மோடியோ, மக்களின் வரிப்பணத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு அதில் ஊர் ஊராக சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். மணிப்பூர் கிட்டத்தட்ட ஓராண்டாக இனக்கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அங்கு மோடி செல்லாதது ஏன்?’’ என கேட்டுள்ளார்.

The post அசாம் காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி யானை சவாரி: வன விலங்குகளை கண்டு ரசித்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Assam Kasiranga National Park ,Kasiranga ,Modi ,Kasiranga National Park ,Tiger Sanctuary ,Assam ,PM ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...