×

4-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா: 100வது டெஸ்டில் அமர்க்களம்!

தர்மசாலா: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 218 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 103, கில் 110, படிக்கல் 65, சர்பராஸ் 56 ரன் விளாசினர்.

குல்தீப் 27, பும்ரா 19 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குல்தீப் 30, பும்ரா 20 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா முதல் இன்னிங்சில் 477 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (124.1 ஓவர்). சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் இளம் சுழல் பஷிர் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆண்டர்சன், ஹார்ட்லி தலா 2, ஸ்டோக்ஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து, 259 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

அஷ்வின் சுழல் ஜாலத்தை சமாளிக்க முடியாமல் திணறிய டக்கெட் 2, கிராவ்லி 0, போப் 19 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 9.2 ஓவரில் 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஜோ ரூட் – பேர்ஸ்டோ ஜோடி பொறுப்புடன் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தது. பேர்ஸ்டோ 39 ரன் எடுத்து குல்தீப் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் 2 ரன், பென் ஃபோக்ஸ் 8 ரன் எடுத்து அஷவின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினர்.

டாம் ஹார்ட்லி (20 ரன்), மார்க் வுட் (0) இருவரையும் பும்ரா அடுத்தடுத்து வெளியேற்ற, இங்கிலாந்து 141 ரன்னுக்கு 8வது விக்கெட்டை இழந்தது. 9வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடிய ஜோ ரூட் – சோயிப் பஷிர் ஜோடி 48 ரன் சேர்த்தது. பஷிர் 13 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் கிளீன் போல்டாக, ரூட் 84 ரன் (128 பந்து, 12 பவுண்டரி) விளாசி குல்தீப் பந்துவீச்சில் பும்ரா வசம் பிடிபட்டார்.

இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 195 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 5, பும்ரா, குல்தீப் தலா 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் , தொடர் நாயகனாக ஜெய்ஸ்வால் விருது பெற்றனர்.

* இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய அஷ்வின், டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் பட்டியலில் கும்ப்ளேவை (35 முறை) பின்னுக்குத் தள்ளி முதலிடம் (36 முறை) பிடித்துள்ளார்.

* தங்களின் 100வது டெஸ்ட்டில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் என்ற பெருமை அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக வார்ன் (ஆஸி), கும்ப்ளே (இந்தியா), முரளிதரன் (இலங்கை) இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.

* டெஸ்டில் அதிகமுறை 5 விக்கெட் வீழ்த்தியவர்கள்: முரளிதரன் (67முறை), வார்ன் (37), ஹாட்லீ (36), அஸ்வின் (36), கும்ப்ளே(35).

* 100வது டெஸ்ட்டில் 2 இன்னிங்சிலும் சேர்த்து அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்: அஷ்வின் (9/128), முரளிதரன்(9/141 வங்கதேசம்), வார்ன் (8/231தெ.ஆப்.), கபில்தேவ் (7/151 பாக்), கும்ப்ளே (7/176 இலங்கை).

* இதுவரை 579 டெஸ்டில் விளையாடி உள்ள இந்தியா 178 வெற்றி, 178 தோல்வி, 222 டிரா கண்டுள்ளது. சென்னையில் ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் சரிசமன் (டை). முதல் 24 டெஸ்டில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.

* இங்கிலாந்துக்கு எதிராக 8வது முறையாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது (7 டெஸ்ட் இந்தியாவில், அதில் 3 சென்னையில்).

The post 4-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா: 100வது டெஸ்டில் அமர்க்களம்! appeared first on Dinakaran.

Tags : India ,Amarkalam ,Dharamsala ,England ,Himachal Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!