×

மோடி திட்டத்துல வீடு கட்டி தர்றதா சொன்னாங்க… ஆனா 2 வருஷமா தரல… பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கிய முதல்வர்

* கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்தில் பட்டா வழங்கிய அதிகாரிகள்

மதுரை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி தராததால், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு கட்டி தருவதாக முதல்வர் அறிவித்து உள்ளார். முதல்வர் அறிவித்த ஒரு மணி நேரத்தில் சின்னப்பிள்ளை வீட்டிற்கு சென்று அதிகாரிகள் பட்டா வழங்கினர். மதுரை மாவட்டம், அழகர்கோவில் ரோட்டில் அப்பன்திருப்பதி அருகில் உள்ள பில்லுசேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி சின்னப்பிள்ளை( 72).

இவர் தனது பகுதியில் கிராமப் பெண்களை ஒருங்கிணைத்து விவசாய பணிகளுக்கு அழைத்துச் சென்று, தானும் விவசாய கூலி வேலை செய்து, வேலை முடிந்ததும் உடன் வந்த கிராமப் பெண்களுக்கான சரியான கூலியை நில உரிமையாளரிடம் பெற்றுக் கொடுத்து வந்தார். இவருடன் சில கிராமப் பெண்களும் தனியார் நிதி நிறுவனங்களில் சேமிப்பை இழந்து பரிதவித்தனர். இதையடுத்து சுயஉதவிக்குழுக்களுக்கான அமைப்பில் இணைந்து, ஏழை, எளிய, அடித்தட்டுப் பெண்களை எல்லாம் சிறு சிறு குழுவாக இயங்கிட தொடர் பிரசாரமும் மேற்கொண்டார்.

கந்து வட்டி கொடுமையிலிருந்து பெண்களை வெளிக்கொண்டு வர உதவியதுடன், அவர்களது வறுமையை போக்கும் முயற்சிகளிலும் பங்கெடுத்தார். காலில் விழுந்த வாஜ்பாய்: இச்சாதனைக்காக கடந்த 4.1.2001ல் டில்லியில் நடைபெற்ற விழாவில் அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் ‘ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் – மாதா ஜீஜாபாய்’ என்ற விருது பெற்றார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வாஜ்பாய் திடீரென சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். இச்செயல் நாடு முழுமையையும் பேச வைத்தது.

அப்போது மும்பையில் பஜாஜ் நிறுவனம் சின்னப்பிள்ளைக்கு பஜாஜ் ஜானகிதேவி புரஷ்கார் விருது வழங்கியது. தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர், பொங்கல் திருநாளில் சின்னப்பிள்ளைக்கு பொற்கிழி வழங்கி கவுரவித்துப் பாராட்டினார். கடந்த 2018ல் ஔவையார் விருது வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது: கடந்த 2019ல் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்புச் செய்தார்.

தொடர்ந்து களஞ்சியம் இயக்கம் மூலம் ஆந்திரா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்குப் பயணித்து, ஏழைப் பெண்கள் விழிப்புணர்வு பெறும் விதத்தில் வறுமை, கந்துவட்டி, வரதட்சணை, மதுபோதை உள்ளிட்டவைகள் குறித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து, பட்டா வழங்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் மேலாகியும் இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என சின்னப்பிள்ளை கோரிக்கை வைத்திருந்தார்.

இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  ‘கனவு’ நனவானது : இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடடினயாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மதுரை-அழகர்கோவில் முதன்மை சாலையில் அப்பன்திருப்பதி அருகேயுள்ள திருவிழான்பட்டி என்ற ஊரில் ஏற்கனவே வழங்கப்பட்ட 1 சென்ட் நிலத்துடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்தை ஒதுக்கீடு செய்து, இந்த மாதமே வீட்டுக்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் நடைபெறும் எனவும் அறிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மதுரை கிழக்கு தாசில்தார் பழனிக்குமார், நேற்று சின்னப்பிள்ளையை அவரது சொந்த கிராமமான பில்லுசேரிக்கே சென்று, அவரது வீட்டில் சந்தித்து வீடு ஒதுக்கீட்டிற்கான பட்டாவை வழங்கினார். மேலும் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் செய்யப்பட்டது. நாளை முதல் வீடு கட்டுதவற்கான கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது.

* முதல்வருக்கு கோடான கோடி நன்றி பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி
பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறும்போது, ‘‘நான் பாட்டுக்கு ஒரு குடிசை வீட்டுல சும்மாதான் இருந்தேன். நீங்க நிறைய விருது வாங்கி இருக்கீங்கன்னு என்னைத்தேடி பாஜ கட்சிக்காரங்க வந்தாங்க. பொன்னாடை போர்த்திட்டு, உங்களுக்கு பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டித்தாரோம்னு சொல்லிட்டுப் போனாங்க. சரின்னு நானும் கட்டித்தருவாங்கன்னு எதிர்பார்ப்புல இருந்தேன். நிறையத்தடவை நானும் போயி எல்லார்ட்டயும் கேட்டுப் பார்த்துட்டேன். வீடு கட்டுற இடத்துக்கு பட்டான்னு கொடுத்தாங்க.

அந்த பட்டாவை வாங்கி வச்சே இப்போ 2 வருஷமாச்சு. ஒரு சென்ட் இடம்னு சொல்லித்தான் கொடுத்தாங்க. இரண்டு பக்கத்துலயும் எந்த வீடும் இல்லாம நடுவுல இந்த இடம் இருந்தும் எனக்கு வீடு கட்டித்தர்றது மாதிரி தெரியல. என் மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான வீட்டுல தாழ்வாரத்துலதான் இருக்கேன். பஸ், ஆட்டோ வசதி இல்லை. நடக்க முடியலை. அப்பன் திருப்பதியை ஒட்டி வீடிருந்தா, பிரஷர், சர்க்கரைன்னு வைத்தியத்துக்கு பக்கத்துல ஆஸ்பத்திரி, சாப்பாடு வாங்கப் போக ஓட்டல்னு வசதியா இருக்கும்.

பணம் வந்தாத்தானே கட்ட முடியும்னு பஞ்சாயத்து தலைவர் துவங்கி எல்லோரும் சொன்னாங்க. வாடகைக்காவது வீடு தாங்கன்னு கேட்டுப்பார்த்துட்டேன். ஆனா வருஷந்தான் போச்சு… ஒண்ணும் நடக்கல. ரொம்ப சிரமான சூழ்நிலையில் இருக்குற என்னோட விருப்பத்தை அறிஞ்சு எனக்குன்னு வீடு ஒதுக்கீடு செய்து, உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இதுக்கான பணிகளையும் வேகப்படுத்தியிருக்காரு. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி’’ என்றார்.

* மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது: இந்திய ஒன்றியத்திலேயே முதன்முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளைக்கு வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகள் முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.

மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தி இருந்தார். இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சின்னப்பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். மகளிர் மேம்பாடு எனும் கலைஞரின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க உள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மோடி திட்டத்துல வீடு கட்டி தர்றதா சொன்னாங்க… ஆனா 2 வருஷமா தரல… பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கிய முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Padma Shri Chinnapillai ,Madurai ,Padmasree Chinnapillai ,Modi ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...