×
Saravana Stores

காசாவில் சோகம் உணவு பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பாராசூட்; 5 பேர் பலி

பாலஸ்தீனம்: காசாவில் உணவு பொருட்களுடன் பொதுமக்கள் மீது விழுந்த பாராசூட்டில் 5 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவும், சீனாவும் வலியுறுத்திய நிலையிலும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

தற்போது அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல், போரை உக்கிர கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது வரை 30,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க, பட்டினியால் உயிரிழப்பு நடப்பது கொடுமையாக உள்ளது. காசாவில் 4ல் ஒருவர் பசியால் வாடுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் கடும் கட்டுப்பாட்டால் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நிவாரண பொருட்கள் சென்ற லாரிகளை மக்கள் முற்றுகையிட்டதால், இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனால் வான்வழியாக உணவு மற்றும் உதவி பொருட்கள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காசாவின் வடக்குபதியில் உள்ள ஷாதி என்ற பகுதியில் பாராசூட் மூலம் உணவு பொட்டலங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

அப்போது ஒரு பாராசூட் விரியாமல் பழுதானதாக தெரிகிறது. அந்த பாராசூட், உணவு பொருட்களுடன் மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்துள்ளது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். பசியால் வாடும் மக்கள் உணவு பொட்டலங்கள் வாங்க காத்திருக்கும்போது உயிரிழக்கும் சம்பவம் வேதனை அளிப்பதாக உள்ளது.

இந்த சம்பவத்தை காசா அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது, ‘நாங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தை பற்றி எச்சரித்திருந்தோம். மனிதாபிமான உதவிகள் என்கிற பெயரில் எங்கள் மக்களை மேலும் கொல்லாதீர்கள். நீங்கள் உண்மையில் எங்களுக்கு உதவ நினைத்தால், ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் உணவு டிரக்குகளை காசாவுக்குள் அனுப்புங்கள். நிலத்தின் வழியாக உணவு பொருட்களை கொடுங்கள்’ என்று கூறியுள்ளது. போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன்படாததால், மேலும் சில நாட்களுக்கு காசா மீதான தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இது தற்போது இருக்கும் பசி, பட்டினி பிரச்னையை மேலும் தீவிரமாக்கும் என ஐநா எச்சரித்திருக்கிறது.

The post காசாவில் சோகம் உணவு பொருட்களுடன் மக்கள் மீது விழுந்த பாராசூட்; 5 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Palestine ,Hamas ,Russia ,China ,Dinakaran ,
× RELATED நிவாரண பணிகளை மேற்கொண்ட ஐ.நா அமைப்பை...