×

காதலிக்கு போலீஸ் உடை அணிவித்து மாமூல் வசூலித்த போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் வினோத மோசடி

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ்(45). இவர் சி.ஆர்.பி.எப்.பணியில்சிறப்பாக செயல்படாததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்தஊரான பெந்துர்த்தியில் வசித்து வரும் ரமேஷ் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ரமேஷ், அவரது காதலி ஆகியோருக்கு அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் காதலிக்கு போலீஸ் எஸ்.ஐ. உடை அணிவித்து அவருடன் சென்று பல இடங்களில் மாமூல் வசூலித்துள்ளார். வேலையில்லா இளைஞர்களை சந்தித்து, ரயில்வே, போலீஸ் துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளனர். ஆனால் பணம் கொடுத்த இளைஞர்களுக்கு பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கி தரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கண்காணித்து நேற்று ஐதராபாத்தில் காதலியுடன் சுற்றித்திரிந்த போலீஸ்காரரை கைது செய்து விசாரித்தனர். இதில் ரமேஷ்க்கு ஏற்கனவே திருமணமாகி 2 மனைவிகள் உள்ளதும் அவர்களை விட்டுவிட்டு, பல ஆண்டுகளாக காதலியுடன் தனியாக வசித்துவருவதும் தெரியவந்தது. இதுதவிர போலீஸ் உடையில் பொம்மை துப்பாக்கியை காட்டி பலரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதலிக்கு போலீஸ் உடை அணிவித்து மாமூல் வசூலித்த போலீஸ்காரர் கைது: ஆந்திராவில் வினோத மோசடி appeared first on Dinakaran.

Tags : Andhra ,Tirumalai ,Hanumand Ramesh ,AP ,Visakhapatnam ,C. R. B. F. ,Ramesh ,Benturthi ,Mamool ,
× RELATED ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட 10...