×

துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கம்: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி, பேராசிரியர்கள், தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் பணி நியமனம், கொள்முதலில் பல்வேறு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின்படி, கூடுதல் செயலாளர் பழனிசாமி, இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இதில், கணினி அறிவியல் துறைத்தலைவரும் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளருமான தங்கவேல் மீது தெரிவிக்கப்பட்ட 8 குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து பதிவாளர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்ய, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்தி உத்தரவிட்டார். ஆனால், துணைவேந்தர் ஜெகநாதன் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கேட்டு, உயர்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆதாரங்களை அனுப்பிய பின்னரும் பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வுபெற்றார். துணைவேந்தர் ஜெகநாதனின் அரசு உத்தரவை கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் சார்பில்,பல்கலைக்கழக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டத்திற்கு, தொழிலாளர் சங்க தலைவர் கணிவண்ணன் தலைமை வகித்துள்ளார். ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், பொதுச் செயலாளர் பிரேம்குமார், தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் வைத்தியநாதன், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் கூறுகையில், `பல்கலைக்கழகத்தின் முக்கிய பொறுப்பான பதிவாளர் பதவியில் உள்ள ஒருவர் மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் அரசு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிடுகிறது.

ஆனால், இதனை மதிக்காத துணைவேந்தர் ஜெகநாதன், குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரை ஓய்வு பெற அனுமதித்துள்ளார். அரசு உத்தரவை துளியும் மதிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகிறோம். தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’’ என்றார்.

The post துணைவேந்தரை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காத்திருப்பு போராட்டம் துவக்கம்: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,SALEM ,JEKHANADHAN ,Pereyar University ,Karuppur ,Dinakaran ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...