×

புதுவை அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை இந்தியா கூட்டணி முற்றுகை

* போலீஸ் தடியடி-தள்ளுமுள்ளு

* எம்.பி.,7எம்எல்ஏக்கள் கைது

புதுச்சேரி : புதுச்சேரி சிறுமி படுகொலையை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடையை மீறிச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தடியடி நடத்தி திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோரை போலீசார், கைது செய்தனர். இதேபோல் காரைக்காலிலும் மறியல் செய்த 2 எம்எல்ஏக்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி கொலை சம்பவத்தில் புதுவை அரசை கண்டித்தும், நீதி கேட்டும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதையொட்டி புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் 10 மணியளவில் ஒன்று திரண்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், வி.சிறுத்தைகள் தேவ.பொழிலன் மற்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர், திருநங்கைகள் என 400க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு நேருவீதி வழியாக கிழக்கு எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

அப்போது நேருவீதி-மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். உடனே போராட்டக்காரர்கள் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக கவர்னர் மாளிகையை முற்றுகையிட வேகமாக ஓடினர். அவர்களை போலீசாரும் துரத்தி சென்றனர். இருப்பினும் நூற்றுக்கணக்கானோர் தலைமை தபால் நிலையம் முன்பு வந்த நிலையில் அங்கு முன்னெச்சரிக்கையாக நின்றிருந்த போலீசார் பேரிகார்டு அமைத்து தடுத்தனர்.

ஆனால் அந்த தடுப்புகள் மீது ஏறி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். சிலர் அருகிலுள்ள மாற்று வீதிகள் வழியாகவும் கவர்னர் மாளிகையை நோக்கி ஓடிவந்தனர். பாரதிதாசன் சிலை அருகே பெண்களை தடுத்ததால் அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சிலரை கவர்னர் மாளிகைக்கு விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இருப்பினும் மகளிரணியினர், போராட்டக்காரர்கள் கவர்னர் மாளிகை அருகிலுள்ள தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகை நுழைவு வாயில் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து கோஷமிட்டவர்களை அகற்றிய போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோரிமேடு அழைத்து சென்றனர்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா கூறுகையில், சிறுமிக்கு நியாயம் கேட்டு போராடும் எங்களை காவல்துறை அடக்குமுறை செய்து அடக்க முயற்சிக்கின்றனர், இது பலிக்காது. சிறுமிக்கு நேர்ந்த குற்றச் செயலுக்கு காரணமான காவல்துறையை வைத்துள்ள அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும். பாஜக-என்ஆர் காங்கிரஸ் அரசு கலைய வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற திருநங்கைகளை போலீசார், வலுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளியதில் 3 பேருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போராட்ட குழுவினர் வெளியேறு வெளியேறு…. கவர்னரே புதுவையை விட்டு வெளியேறு… முதல்வரும், அமைச்சரும் பதவி விலக வேண்டும்…. என்று கோஷமிட்டனர். இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை வாசல், சுற்றுப்புற பகுதிகள் களேபரமாக இருந்தது.

அங்கு தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு அடைப்பு காரணமாக நடைபெற்ற மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்களால் 500க்கும் மேற்பட்டோர் கைதாகினர். காரைக்காலிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்றது. அங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ்கள் ஓடவில்லை. மறியலில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர். திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், நாக தியாகராஜன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைதாகினர். இதனால் புதுச்சேரி பரபரப்புடன் காணப்பட்டது.

எஸ்.பி. அலுவலகத்தை சமூக அமைப்புகள் முற்றுகை

பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.வி. கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் ராஜா தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று நேருவீதி, செஞ்சி சாலை சந்திப்பில் உள்ள கிழக்கு எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது புதுச்சேரி காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதில் மற்ற சமூக அமைப்புகளான மக்கள் உரிமை கூட்டமைப்பு, தி.க., பெரியார் தி.க., தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம், மக்கள் வாழ்வுரிமை இயக்கம், தமிழர் களம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தன. முன்னதாக மறைமலையடிகள் சாலையில் வந்த தனியார் பஸ்சை சிலர் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்படவே தி.வி. கழக நிர்வாகியை கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கிழக்கு எஸ்.பி. லட்சுமியை சமூக அமைப்பினர் பதிலுக்கு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சில நிமிடத்தில் தி.வி. கழக நிர்வாகி விடுவிக்கப்பட்டார்.

அதிமுக சாலை மறியல் வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்

முழு அடைப்பு அறிவித்த அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் உப்பளத்தில் இருந்து பேரணியாக வந்து அண்ணா சாலையில் மறியல் செய்தனர். அப்போது முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கட்சியினர் என 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு சிறுமி சாவுக்கு நீதி கேட்டு கோஷமிட்டனர். இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து அப்புறப்படுத்தினர். அப்போது அதிமுக அன்பழகன் கூறுகையில், புதுவை அரசு, சிறுமி படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும், போராட்டத்துக்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறினார்.

இதேபோல் சுதேசி மில் எதிரே ஆட்டோ டிரைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபால் சிறுமி கொலை கண்டித்து புதுச்சேரி வழக்கறிஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டு வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டன.

The post புதுவை அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை இந்தியா கூட்டணி முற்றுகை appeared first on Dinakaran.

Tags : India-India alliance ,Governor's House ,M. P.7MLAs ,Puducherry ,India Coalition ,Puducherry girl ,New Government ,India ,
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...