×

மகாசிவராத்திரியை முன்னிட்டு செவ்வந்திப் பூக்களை விற்பனைக்கு அனுப்பிய பெரியகுளம் விவசாயிகள்

பெரியகுளம் : மகாசிவராத்திரியை முன்னிட்டு பூக்கள் நல்ல விலை கிடைக்கும் என்பதால் பெரியகுளம் பகுதியில் வயல்களில் பூத்து குலுங்கி இருந்த செவ்வந்தி பூக்களை அறுவடை செய்து விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பிவைத்தனர்.பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், வைகைபுதூர், சங்கரமூர்த்திப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் செவ்வந்தி பூ சாகுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மகாசிவராத்திரி நேற்று இரவு அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சைவ கோயில்கள், குலதெய்வ கோயில்களில் இரண்டு நாட்களுக்கு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. இதற்காக சாமி சிலைகளில் அலங்காரம் செய்வதற்காகவும், மலர் மாலைகளில் சேர்ப்பதற்காகவும் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும்.தமிழக முழுவதும் பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, தேனி, கம்பம், உத்தமபாளையம், குமுளி பகுதிகளிலும், மேலும் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் ஏராளமான குலதெய்வ கோயில்கள் உள்ளன.

மேலும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களும் உள்ளன.இதனால் பூக்களின் தேவை அதிகமாக இருந்ததால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் செவ்வந்தி பூக்களை நேற்று முன்தினம் முதல் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பிவருகின்றனர். சாதாரண நாட்களில் செவ்வந்திப் பூவின் விலை ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விலை போகும் நிலையில், மகாசிவராத்திரியையொட்டி செவ்வந்திப் பூவின் விலை கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலை கிடைக்கும் என்பதால் மும்முரமாக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

 

The post மகாசிவராத்திரியை முன்னிட்டு செவ்வந்திப் பூக்களை விற்பனைக்கு அனுப்பிய பெரியகுளம் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Mahashivarathri ,Mutlakampatti ,Kullapuram ,Vaikaiputhur ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி