×

போடி பகுதியில் தொடர்மழையால் தள்ளிப்போன மாங்காய் சீசன்

*சரிவர பூக்காததால் விவசாயிகள் கவலை

போடி : போடி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடர் மழை பெய்ததால் சித்திரையில் துவங்க வேண்டிய மாங்காய் சீசன் ஒரு மாதம் கடந்து வைகாசிக்கு தள்ளிப்போகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் பருவம் தப்பியதால் மரங்களில் சரிவர பூ எடுக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள போடி, தேவாரம், கோம்பை, உத்தமபாளையம், கூடலூர், கம்பம், ஆண்டிபட்டி, வருசநாடு, கண்டமனூர், பெரியகுளம், தேவதானப்பட்டி உட்பட சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் மாந்தோப்புகளை பராமரித்து வருகின்றனர்.

இந்த தோப்புகளில் காசா, காளயப்பாடி, செந்தூரம், கல்லா மாங் காய், கழுத விட்டை, பங்கனவல்லி, சப்பட்டை, மைசூர் என பல ரகங்களில் மாமரங்களை வளர்க்கப்படுகிறது. அறுவடை துவங்கி 3 மாதம் வரை ஒரு வருட பலனாக மாங்காய்கள் எடுக்கப்படுகிறது.குறிப்பாக போடியை சுற்றியுள்ள முந்தல், ஆண்டிஓடை, முனீஸ்வரன் கோயில் சாலை, பரமசிவன் கோயில் மலை அடிவாரம், குரங்கணி சாலை, பிச்சாங்கரை, அடகுபாறை, வடக்கு மலை, அத்தியூத்து, சோலையூர், சிறைக்காடு, பெரியாற்று கோம்பை, முட்டு கோம்பை உட்பட பல இடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாந்தோப்புகள் உள்ளன.

விவசாயிகள் வருட பலனாக தரும் இந்த மாந்தோப்புகளுக்கு ஒவ்வொரு மரத்திலும் நல்ல பூ எடுத்து அதிக அளவில் மா பிஞ்சுகள் சடைச்சடை யாக பிடிப்பதற்கு கவனமுடன் உரமிடும் மற்றும் மருந்து தெளிக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.கோடைகாலத்தில் 3 மாத பலனாக மாங்காய் அறுவடை செய்து மூட்டம் போடப்பட்டு குறிப்பிட்ட நாட்களில் மாம்பழமாக எடுத்து விற்பனைக்காக வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

குறிப்பாக காளையப்பாடி காசாலட்டு, பங்கனவல்லி, சப்பட்டை உள்ளிட்ட உயர்தர மாம்பழங்களை வெளி நாடுகளுக்கு லோடு கணக்கில் அனுப்பப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் 6 மாதத்திற்கு முன்பாக அட்வான்ஸ் தொகை கொடுத்து ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்துகொள்கின்றனர்.இந்த நிலையில், இம்முறை போதுமான மழை கிடைத்ததால் மரங்களுக்கு நல்ல ஊக்கம் கிடைத்தது.

ஆனால் இரவில் குளிரும், பகலில் வெயிலும் அதிகமாக இருந்ததால் பூக்கள் சரி வர பூக்காமல் மரத்திற்கு பாதி அளவுக்கே பூத்துள்ளன. பூக்கள் சரிவர இன்னும் பூக்காமல் இருப்பதால் சீஸன் தள்ளிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போடி விவசாயி கணேசன் கூறுகையில், “மாந்தோப்பில் அதிகளவில் பூ பூத்து நல்ல உற்பத்தி கிடைக்கும் நிலையில் பனி, வெயில், மழை என மாறி வந்ததால் மரங்களில் சரிவர பூ எடுக்காமல் உள்ளது. ஒரு குழிக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து வருகிறோம். இன்னும் பங்குனி முழுவதும் பூ எடுத்தால் சித்திரையில் துவங்க வேண்டிய சீசன் வைகாசிக்கு தள்ளிப்போகும்’’ என்றார்.

The post போடி பகுதியில் தொடர்மழையால் தள்ளிப்போன மாங்காய் சீசன் appeared first on Dinakaran.

Tags : Mangoi season ,Bodi ,mangoi ,Chitri ,Vaikasi ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்