×

மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சம் டன் புளி உற்பத்தி செய்ய இலக்கு

*புவிசார் குறியீடு வழங்க கோரிக்கை

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சம் டன் புளி உற்பத்தி செய்ய இலக்கு உள்ளதாக புளி வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், தர்மபுரி மாவட்ட புளிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புளி சாகுபடி செய்யப்பட்டாலும், தர்மபுரி மாவட்ட புளி மிகவும் பிரசித்தி பெற்றது.

இங்கு உற்பத்தியாகும் புளி இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை கொண்டதாகும். இந்தியாவில் 57ஆயிரத்து 990 ஹெக்டர் பரப்பில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் விவசாயிகளின் பட்டா நிலங்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 405 ஏக்கர் நிலத்தில் புளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மார்ச் முதல் மே மாதம் வரை புளி அறுவடை நடக்கும். அறுவடை செய்யப்படும் புளி ஓடு, விதை (கொட்டை) மற்றும் நார் நீக்கப்பட்டு, மதிப்புக் கூட்டுப் புளியாக்கப்படுகிறது.

இவ்வாறு மதிப்புக் கூட்டு புளியாக மாற்றும் பணியில் சவுளுப்பட்டி, சோகத்தூர், மதிகோண்பாளையம், பழைய தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய், அவர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் புளி சுத்தம் செய்யும் பணி குடிசை தொழிலாக நடந்து வருகிறது.

இந்த பணிகளில் அதிகம் பெண்கள் தான் ஈடுபட்டுள்ளனர். குடும்ப வேலைகளை செய்து கொண்டே புளி ஓடு நீக்குதல், விதை நீக்குதல், புளி பதப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை பகுதிநேர வேலையாக செய்கின்றனர். மேலும், விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சார்பில், தரமான புளியை தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான புளி அறுவடை தொடங்கியது. மாவட்டத்தில் 20 சதவீத புளி விளைகிறது. 80 சதவீத புளி வடமாநிலங்களில் கொள்முதல் செய்து, சுத்தம் செய்து, பதப்படுத்தி வடமாநிலத்திற்கே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சமையலுக்கு புளியை சாதாரண மக்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தென்னிந்தியா முழுவதும் புளி விற்பனைக்கு செல்கிறது. இதனிடையே, தர்மபுரி மாவட்ட புளிக்கு புவி சார் குறியீடு வழங்க வேண்டும் என புளி வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து புளி வியாபாரிகள் சங்க தலைவர் பச்சமுத்து பாஸ்கர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் புளியை கொள்முதல் செய்து, சுத்தம் செய்யும் பணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, 90 சதவீதம் பேர் பெண்கள் தான் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 20 சதவீத புளி அறுவடை மூலம் கிடைக்கிறது. மீதமுள்ள 80 சதவீத புளி அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம் மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தரம்புரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு சுத்தம் செய்து, கொள்முதல் விலைக்கு மீண்டும் வெளிமாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அறுவடை செய்யப்படும் புது புளி மார்ச் மாதத்தில் இருந்து விற்பனைக்கு வருகிறது. புது புளி சந்தைக்கு வந்தவுடன் விலை ₹50 வரை குறையும். சாதாரண மக்கள் வாங்கும் வகையில் புளி இருக்கும். தற்போது ஒருகிலோ புளியின் கொள்முதல் விலை ₹80 ஆக உள்ளது. இது வெளிச்சந்தையில் கிலோ ₹90 முதல் ₹150 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. புது புளி வரத்தால் விலை குறையும்.

ஏழை, எளிய மக்களுக்கு சீரான விலையில் புளி கிடைக்கும். தர்மபுரி மாவட்ட புளிக்கு, புவி சார் குறியீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 1 லட்சம் டன் புளி உற்பத்தி செய்தும், கொள்முதல் செய்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டும் இதே போல், ஒரு லட்சம் டன் புளி கிடைக்கும். இவ்வாறு கூறினார்.

The post மாவட்டத்தில் நடப்பாண்டு 1 லட்சம் டன் புளி உற்பத்தி செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED கோடுப்பட்டி வனப்பகுதியில் தண்ணீர் குடித்து குதூகலிக்கும் யானைகள்