×

பல ஆண்டுகளாக மனு அளித்தும் பலனில்லை ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு

* கண்டுபிடித்து தர விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போன நரி ஆற்றினை கண்டுபிடித்து தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயமும், அதைசார்ந்த கால்நடை, கோழிவளர்ப்பு உள்ளிட்டவைகளே பிரதானமாக இருந்துவருகிறது. டெல்டா மாவட்டத்திற்கு நிகராக நெல்சாகுபடியும், உணவுதானிய உற்பத்தியிலும் சிறந்து விளங்கிவருகிறது. சவுக்கை, கரும்பு சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

ஆற்று, போர்வெல் பாசனம் மூலம் சாகுபடி செய்துவந்தாலும் மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் சேகரிக்கும் தண்ணீரை நம்பியே முப்போக விளைச்சல் இருந்துவருகிறது. பருவமழை பொய்த்துவிட்டால் சாகுபடி பரப்பு குறைவது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகின்றது. இதனிடையே மழைக்காலங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், வரத்து வாய்க்காலை தூர்வாரிடவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் படிப்படியாக மாவட்ட நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களை தூர்வாரி வருகின்றன. ஆனால் பலஆண்டுகளாக நரி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் தற்போது ஆறு இருந்தஇடமே தெரியாமல் மறைந்துவிட்டது என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தளவானூர் அருகே மலட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய இந்த நரி ஆறு பில்லூர், ஆனாங்கூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகளை நிரப்பவும், குடிநீர்ஆதாரத்திற்கு உதவியாகவும் இருந்த இந்த நரி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் இதுவரை அகற்றப்படாமல்உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்துக்கு பிரதான நீராதாரமாக உள்ள தென்பெண்ணை, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளிலிருந்து சிறு ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் ஏரி, குளங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு விவசாயம், குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீா் நிலைகளில் நீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயா்ந்து வறட்சிக் காலங்களில் கைகொடுத்து வருகிறது. இந்நிலையில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நீராதாரமாக உள்ள நரிஆற்றுப் பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் வில்லியனூா், சிறுவந்தாடு உள்ளிட்ட10 கிராமங்களுக்கு மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியவில்லை. இது குறித்து ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.தற்போது பில்லூர் பகுதியில் நீண்டதூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆறு இருந்தஇடமே தெரியாமல் போய்விட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்களுக்கு நீராதாரமாக நரி ஆறு இருந்து வருகிறது. தற்போது இந்த ஆறு ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு நீரைக் கொண்டு செல்லமுடியவில்லை.

இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நரி ஓடை ஆக்கிரமிப்பையும், ஆழங்கால் வாய்க்கால் மூலம் நரி ஓடைக்கு வரும் நீா்வழிப் பாதையை தடை செய்துள்ள ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்றுவதற்கு பொதுப்பணித் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பல ஆண்டுகளாக மனு அளித்தும் பலனில்லை ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன நரி ஆறு appeared first on Dinakaran.

Tags : Nari Aru ,Villupuram ,Nari River ,Villupuram district ,
× RELATED 2.5 கிலோ நகை அணிந்து வந்த கர்நாடக...