×

பனச்சமூட்டில் குப்பை எரிக்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்

*பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?

அருமனை : பனச்சமூடு பகுதியில் பேருந்து நிறுத்த போதுமான இடவசதி இல்லை என்பதை அறிந்த அன்றைய பொறுப்பாளர்கள் 2011ம் ஆண்டு புலியூர்சாலை ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி வாயிலாக அனைத்து தமிழ்நாடு பேருந்துகளும் நிறுத்த வசதியாகவும், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஓய்வெடுத்து செல்லும் வகையிலும் பேருந்து நிலையம் அமைத்தனர்.

ஆனால் சில நாட்கள் மட்டுமே பேருந்துகள் வந்து சென்ற நிலையில், பின்னர் பேருந்து நிலையத்தின் செயல்பாடு முடிந்து விட்டது. பேருந்துகள் நிறுத்துமிடத்தில் மழை காலங்களில் நீர் தேங்கி குளம் போன்று காட்சி அளித்தது. பஸ் நிலையம் செயல்பட துவங்கிய போது மேற்கொண்ட பணிகளை தவிர பேருந்து நிலையத்தில் எந்த வளர்ச்சி பணியும் பின்னர் மேற்கொள்ளப்படவில்லை.
பனச்சமூடு பகுதியில் இருந்து இந்த பேருந்து நிலையம் வெகு தூரம் என்பதால் மக்கள் வந்து செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு வந்தாலும் அனைத்து பேருந்துகளும் இங்கு வந்து செல்வதில்லை. சில தருணங்களில் ஒரு பேருந்து கூட இங்கு வருவது இல்லை.

இந்த பேருந்து நிலையத்தில் வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வெடுக்கும் அலுவலகம் மற்றும் பயணிகள் நிழற்குடை என பல்வேறு கட்டமைப்புகள் தற்போது பராமரிப்பின்றி மது பிரியர்களின் கூடாரமாக மாறி இருக்கிறது. பேருந்துகள் நிறுத்துமிடம் துப்புரவு பணியாளர்களுக்கு குப்பைகளை எரிக்கும் மைதானமாக மாறி உள்ளது.

விரைவில் இப்பகுதியை அதிகாரிகள் கவனித்து உரிய வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு அனைத்து பேருந்துகளும் இப்பகுதிக்கு வந்து செல்ல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post பனச்சமூட்டில் குப்பை எரிக்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம் appeared first on Dinakaran.

Tags : Panachamut ,Arumanai ,Panachamootu ,Puliyursalai ,panchayat ,
× RELATED கனமழை காரணமாக குமரி நடுவே அமைந்துள்ள...