×

சிவகங்கை அருகே மாணவர்கள் சேர்க்கை திருவிழா: மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர்

 

சிவகங்கை, மார்ச் 9: சிவகங்கை அருகே சக்கந்தி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை திருவிழாவில் மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். சக்கந்தி ஊராட்சி ஒன்றிய தொக்கப்பள்ளியில், மாணவர்கள் சேர்க்கை திருவிழா நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் புதிதாக பள்ளியில் சேரவந்த மாணவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அவர் பேசியதாவது: மாணவர்களுக்கு கற்றலுக்கான ஆர்வத்தை ஏற்படுத்திடும் வகையில் சிறப்பான நடவடிக்கை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சிறப்பாக பயில்வதற்கு ஏதுவாக தேவையானஅனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இணையதள வசதிகளுடன் பயில்வதற்கான வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வரும் கல்வியாண்டில் 1 முதல் 5ம் வகுப்புகள் வரையிலான தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளது. அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளின் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் பள்ளியின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும். அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பள்ளி மேம்பாட்டு பணிக்கென சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து வசதிகளும் உள்ள அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்து, நல்ல முறையில் பயில்வதற்கு உறுதுணையாக பெற்றோர் இருந்திடவேண்டும். கடந்த ஆண்டுகளில் பள்ளி மாணவ மாணவியர்களின் சேர்க்கை என்பது ஜூன் மாதங்களில் நடைபெற்று வந்தது. தற்போது மார்ச் மாதத்திலேயே புதிய மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பள்ளி செல்லா விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, பள்ளியில் சேர்ப்பதற்குமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, வட்டார கல்வி அலுவலர் பாலாமணி, ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பரமேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீபா, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணாக்கர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கை அருகே மாணவர்கள் சேர்க்கை திருவிழா: மாலை அணிவித்து வரவேற்ற கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Student admission festival ,Sivaganga ,Sivagangai ,Panchayat Union ,Primary ,School ,Sakkandi ,Shakandi ,Collector ,Asha Ajith ,admission ,
× RELATED சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை...