×

திருவாரூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது 2 அடி உயரமுள்ள பழங்கால சிலை கிடைத்தது

 

நீடாமங்கலம், மார்ச் 9: திருவாரூர் அருகே பெருமாளகரம் கிராமத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, சுமார் 2 அடி உயரமுள்ள விலைமதிப்பற்ற பழங்கால சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருமாளகரம் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அருகே கொரடாச்சேரி கடை தெருவில் பூக்கடை வைத்துள்ள மாரிமுத்து என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டும் போது, தரை மட்டத்திலிருந்து சுமார் 4 அடிக்கு கீழே ஒரு சத்தம் கேட்டது.

எனவே மெதுவாக தோண்டி பார்க்கும் போது, சுமார் 2 அடி உயரமுள்ள பழங்கால உலோகத்திலான சாமி சிலை ஒன்று இருந்தது தெரிய வந்தது. அதன் அருகில் சர விளக்கு ஒன்றும், சர விளக்கு தொங்குவதற்காக உள்ள செயின் ஒன்றும், தலை கவசம் ஒன்றும் இருந்தது. தகவலறிந்த ஊராட்சி தலைவர் பானுப்பிரியா பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் நீடாமங்கலம் தாசில்தார் தேவேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார்.

தாசில்தார் தேவேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றார். இந்த சிலை ஐம்பொன் சிலையா, வேறு உலோகத்தால் ஆன சிலையா, இதன் மதிப்பு என்ன என்பது குறித்து தொல்பொருள் துறை ஆய்வாளர்கள் பரிசோதனைக்கு பின் தான் தெரிய வரும் என்று தாசில்தார் தெரிவித்தார். இதேபோல கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ராமர் பாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான 10க்கும் மேற்பட்ட உலோக பொருட்கள் கிடைத்தது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

The post திருவாரூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது 2 அடி உயரமுள்ள பழங்கால சிலை கிடைத்தது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Needamangalam ,Perumalakaram ,Perumal Temple ,Koradacherry Union, Tiruvarur district.… ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி