×

பெண் பிள்ளைகளிடம் எப்படி நடக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்: மேயர் பிரியா அறிவுரை

சென்னை, மார்ச் 9: ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தை பருவம் முதலே, பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை, ஆண் குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் என்று மேயர் பிரியா கூறினார்.
சென்ைன மாநகராட்சி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மேயர் பிரியா தலைமை வகித்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 25 மகளிர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மகளிர் சாதனையாளர் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும், மகளிர் அலுவலர்களுக்கிடையே நடந்த கோலப்போட்டி, கவிதைப் போட்டி, பாட்டுப் போட்டி, பாசிங் பால் மற்றும் ஆடை அலங்கார அணிவகுப்பு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மகளிருக்கு கேடயம் வழங்கி கவுரவித்தார்.

விழாவில் மேயர் பிரியா பேசியதாவது: மகளிர் தினம் என்பது இன்று ஒரு நாள் மட்டும் இல்லை. ஒவ்வொரு நாளும் நமக்கு மகளிர் தினம் என்பதை நினைத்து நமக்கு நாமே முக்கியத்துவம் கொடுத்து பெருமைக் கொள்ள வேண்டும். இன்று மகளிர் தினம் என்பதை தாண்டி எனக்கு தனிப்பட்ட முறையில் இது ஒரு சிறப்பான நாள். ஏனெனில் இரண்டாண்டுக்கு முன்பு நான் மேயராக பதவி பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக கலந்துகொண்ட நிகழ்வு மகளிர் தின விழா. எல்லா ஆண்களுக்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார்கள் என்பது போல், எல்லா பெண்களுக்கு பின்னும் ஒரு ஆண் இருப்பார்கள்.

மகளிர் தினத்தில் மட்டும் மகளிரை கொண்டாட வேண்டும் என்பதை தவிர்த்து, ஒவ்வொரு நாளும் பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து. ஏனெனில், பெண்கள் ஒவ்வொரு நாளும் தனது குடும்பத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் பாடுபடுகின்ற காரணத்தால் நிச்சயம் எப்பொழுதும் கொண்டாடப்பட வேண்டும். தற்பொழுது பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சேவை புரிந்து வருகின்றனர். அனைத்து வேலைகளையும் திறமையாக செய்யக் கூடியவர்கள் பெண்கள்.

ஒவ்வொரு நாளும் உங்களுடைய உடல் நலத்திற்காகவும், மனநலத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். பெண்கள் தினம் என்பதை கடந்து, நம் வீட்டில் உள்ள ஆண் குழந்தைகள், பெண் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை குழந்தைப் பருவம் முதலே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். அப்பொழுது தான் பிற்காலத்தில் அந்த ஆண் குழந்தை சமுதாயத்தில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும், மரியாதை தர வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் ஆணையர்கள் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, ஆர்.லலிதா, துணை ஆணையாளர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார், கட்டா ரவி தேஜா, நிலைக்குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, சர்பஜெயாதாஸ் நரேந்திரன், உதவி ஆணையர் உமா மகேஸ்வரி, மாநகர மருத்துவ அலுவலர் எஸ்.பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பெண் பிள்ளைகளிடம் எப்படி நடக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்: மேயர் பிரியா அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Mayor ,Priya ,Chennai ,International Women's Day ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED ரத்னம் விமர்சனம்