×
Saravana Stores

மன்னார் வளைகுடா, பால்க் ஜலசந்தியை பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை தொடங்கியது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியை பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படையை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, கடல்சார் உயர் இலக்கு படை அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் ஒருபகுதியாக, கடல்சார் உயர் இலக்கு படையை அமைக்க ரூ.109.65 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்தியாவிலேயே முதன்முறையாக, மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், இத்திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ‘இந்த கடல்சார் உயர் இலக்கு படை பவளப்பாறைகள், கடல் புல், பிற கடல் தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் போன்ற மதிப்புமிக்க கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான தொடக்கமாக அமையும்’’.என்றார். மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் கடல்சார் வன உயிரினக் குற்றங்களான கடல்வாழ் உயிரினங்களை கடத்தல் மற்றும் வேட்டையாடுதலை தடுக்கும் பொருட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த கடல்சார் உயர் இலக்கு படையில் உள்ளூர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 12 கடல்சார் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி, ஸ்நோர்கெலிங் உள்ளிட்ட கடல் ரோந்து தொடர்பான விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இந்திய கடலோரக் காவல்படை, கடற்படை மற்றும் கடலோர காவல் ஆகிய சிறப்புப் படைகள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடல்சார் உயர் இலக்கு படையானது கம்பியில்லாத் தகவல் தொடர்புடன் கூடிய இரண்டு ஆழ்கடல் படகுகளுடன் செயல்படுகிறது. இப்படை கடந்த ஏப்ரல் 2023 முதல் பல்வேறு முன்னோட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இக்காலகட்டத்தில், 25 சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிந்து 4133 கிலோ சட்டவிரோத வன உயிரினப் பொருட்களை கைப்பற்றியுள்ளது.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர மண்டலங்கள் வளமான சுற்றுச்சூழல் அமைப்புகளின் இருப்பிடத்தைக் கொண்டுள்ளதால் இவை அதிக உணர்திறன் கொண்ட உயிர்கோள மையமாகவும், நாட்டிலேயே பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாகவும் பவளப்பாறைகள், மண் அடுக்குகள், உப்பு அடுக்குகள், மற்றும் சதுப்பு நிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் இப்பகுதிகள் மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டியவை ஆகும். இப்பகுதிகளில் சட்டவிரோத வன உயிரினக் கடத்தலை எதிர்ப்பதில் கடல்சார் உயர் இலக்கு படை முக்கியப் பங்கு வகிக்கும். இந்நிகழ்வின்போது, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்),சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனஉயிரினம்) நாகநாதன் மற்றும் ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

The post மன்னார் வளைகுடா, பால்க் ஜலசந்தியை பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை தொடங்கியது: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : INDIA ,MANNAR GULF, BALK STRAIT ,NADU ,Chennai ,Tamil Nadu government ,Maritime High Target Force ,Gulf of Mannar ,Balk Strait ,2022 Budget Meeting ,Government of Tamil Nadu ,Gulf ,of Mannar ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்