×

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர்: 249 பயணிகள் தப்பினர்

நியுயார்க்: அமெரிக்காவில் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்ப தயாராக இருந்தது. 249 பயணிகளுடன் ஜப்பானின் ஓசாகா விமான நிலையத்திற்கு இந்த விமானம் பயணிக்க இருந்தது. அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை மதியம் 1:20 மணிக்கு அந்த விமானம் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்திலிருந்து கிளம்பியது. கிளம்பிய சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் டயர் ஒன்று திடீரென கழன்று விழுந்தது.

வானிலிருந்து கீழே விழுந்த இந்த டயர், அங்கிருந்த வாகனம் நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் பார்க்கிங் பகுதியில் இரும்பு வேலிகள் சேதம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் விமானிகள் அவசரமாக விமானத்தை மீண்டும் தரையிறக்க கோரிக்கை விடுத்தனர். 6 டயர்களில் ஒரு டயர் இல்லாமல் தொடர்ந்து பறந்த விமானம் பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் தயாராக இருந்தனர். இருந்த போதும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் 249 பயணிகளும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பினர். அவர்களுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

The post அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர்: 249 பயணிகள் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : America ,New York ,United States ,United Airlines ,San Francisco airport ,Japan ,
× RELATED 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட கார்: அமெரிக்காவில் 3 இந்திய பெண்கள் பலி