×

ரோகித் 103, கில் 110, படிக்கல் 65, சர்பராஸ் 56 இந்தியா அபார ரன் குவிப்பு: பந்துவீச்சில் பஷிர் அசத்தல்

தர்மசாலா: இங்கிலாந்து அணியுடனான 5வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 57.4 ஓவரில் 218 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் குல்தீப் 5, அஷ்வின் 4, ஜடேஜா 1 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 57 ரன் விளாசி அவுட்டானார்.

கேப்டன் ரோகித் 52, கில் 26 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் சதம் விளாசினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 171 ரன் சேர்த்தது. ரோகித் 103 ரன் (162 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), கில் 110 ரன் (150 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து தேவ்தத் படிக்கல் – சர்பராஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்தனர். சர்பராஸ் 56, படிக்கல் 65 ரன் எடுத்து பஷிர் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஜடேஜா, ஜுரெல் தலா 15 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அஷ்வின் டக் அவுட்டானார்.

குல்தீப் – பும்ரா இணைந்து 9வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து வீரர்களின் பொறுமையை சோதிக்க…இந்தியா 2ம் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்துள்ளது. குல்தீப் 27, பும்ரா 19 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சில் சோயிப் பஷிர் 4, ஹார்ட்லி 2, ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 2 விக்கெட் இருக்க இந்தியா 255 ரன் முன்னிலை பெற்றுள்ளதால், இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியுடன் இன்று 3வது நாள் சவாலை சந்திக்கிறது.

* டெஸ்ட் போட்டிகளில் ரோகித் நேற்று தனது 12வது சதத்தை விளாசினார். இது அவரது 48வது சர்வதேச சதமாகும் (டெஸ்ட் 12, ஒருநாள் 31, டி20 5). இதன் மூலம் ராகுல் டிராவிடின் சாதனையை (டெஸ்ட் 36, ஒருநாள் 12) சமன் செய்துள்ளார்.
* இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதம் அடித்த இந்திய தொடக்க வீரர் என்ற கவாஸ்கரின் சாதனையயும் (38 டெஸ்டில் 4 சதம்) ரோகித் சமன் செய்தார்.

The post ரோகித் 103, கில் 110, படிக்கல் 65, சர்பராஸ் 56 இந்தியா அபார ரன் குவிப்பு: பந்துவீச்சில் பஷிர் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Rohit 103 ,Gill 110 ,Padgal 65 ,Sarbaras ,India ,Bashir ,Dharamsala ,England ,Himachal Cricket Association Stadium ,Gill ,Padkal 65 ,Dinakaran ,
× RELATED ஐசிசி டெஸ்ட் தரவரிசை ஆஸ்திரேலியா நம்பர் 1