×

சிறுமி படுகொலை கண்டித்து முழுஅடைப்பு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர்: பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி: சிறுமி படுகொலைக்கு காரணமாக புதுச்சேரி தேஜ கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி, அதிமுக அறிவித்த முழு அடைப்பு காரணமாக புதுவையில் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது, கஞ்சா போதையில் இருந்த சிலரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் (57), கருணா (எ) கருணாஸ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்காத என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் 8ம் (நேற்று) தேதி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதேபோல் அதிமுகவும் பந்த் போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அறிவித்தபடி புதுச்சேரியில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது. இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள் ஓடவில்லை. 500க்கும் மேற்பட்ட தனியார், அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ்நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

அதேவேளையில் தமிழகத்தில் அரசு பஸ்கள் இயங்கிய நிலையிலும் அவை இருமாநில எல்லையான கோரிமேடு, கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு வரையிலும் வந்து திரும்பின. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர். பிரதான கடை வீதிகளான நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படவில்லை. திரையரங்குகளில் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின. முழு அடைப்பையொட்டி புதுச்சேரி ராஜா தியேட்டர் சந்திப்பில் 10 மணியளவில் ஒன்று திரண்ட இந்தியா கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் ராஜாங்கம், உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், திருநங்கைகள் என 400க்கும் மேற்பட்டோர் பேரணியாக புறப்பட்டு நேருவீதி வழியாக கிழக்கு எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அப்போது நேருவீதி மிஷன் வீதி சந்திப்பில் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். உடனே போராட்டக்காரர்கள் மிஷன் வீதி, ரங்கப்பிள்ளை வீதி வழியாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இருப்பினும் மகளிரணியினர், போராட்டக்காரர்கள் ஆளுநர் மாளிகை அருகிலுள்ள தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகை நுழைவு வாயில் பகுதிக்கு சென்றனர். பின்னர் போராட்டத்தை கைவிட மறுத்த எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி கோரிமேடு அழைத்துச் சென்றனர்.

முழு அடைப்பு காரணமாக இந்தியா கூட்டணி, அதிமுக, சமூக அமைப்புகள் முற்றுகை, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். முழு அடைப்பு காரணமாக புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. புதுவையில் முழு அடைப்பு நடைபெற்றாலும் அரசு அறிவித்திருந்தபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெற்றது.

* காரைக்காலிலும் போராட்டம்
காரைக்காலிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த் போராட்டம் நடைபெற்றது. அங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பஸ்கள் ஓடவில்லை. மறியலில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

The post சிறுமி படுகொலை கண்டித்து முழுஅடைப்பு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர்: பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Allies of India ,Puducherry ,India Alliance ,AIADMK ,Puducherry Teja ,government ,India Allies ,Dinakaran ,
× RELATED 40 தொகுதிகளிலும் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: முத்தரசன் உறுதி