×

417 ரூபாயாக இருந்ததை ரூ.919க்கு ஏற்றிவிட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: 9 ஆண்டுகளாக சும்மா இருந்த பின் மகளிர் தினத்துக்காக குறைத்ததாக இப்போது மோடி அறிவிப்பு

சேலம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் கடந்தாண்டு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டு, ரூ.1,130க்கு மேல் விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.200 குறைத்தது.

அதன்பிறகு வீட்டு காஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நிலையாக வைத்துக்கொண்டனர். நடப்பு மாதத்திற்கான (மார்ச்) புதிய விலையை கடந்த 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. அப்போதும் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை 8.41 மணிக்கு தனது எக்ஸ்தள பக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி ரூ.100 விலை குறைப்பின் மூலம் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.803, மும்பையில் ரூ.802.50, கொல்கத்தாவில் ரூ.829, சென்னையில் ரூ.818.50, சேலத்தில் ரூ.836.50என குறைகிறது.

இன்று (9ம் தேதி) காலை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பிரசாரத்தை தொடங்கி விட்டார். அம்மாநிலங்களில் சிலிண்டர் விலை உயர்வின் எதிர்ப்பு பெண்கள் மத்தியில் இருப்பதை அறிந்து மகளிர் தினத்தன்று திடீரென சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்துள்ளார் எனக்கூறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 20 டாலருக்கு கீழ் வந்தபோதும் சிலிண்டர் விலையை குறைக்காமல் ரூ.1000க்கு மேல் வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்தை ஒன்றிய அரசு சம்பாதித்தது.கடந்த 9 ஆண்டுகளாக விலையை குறைக்காமல் தற்போது தேர்தல் லாபத்திற்காக விலை குறைப்பு நாடகத்தை ஒன்றிய அரசு ஆடுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

முக்கிய நகரங்களில் சிலிண்டர் விலை
நகரம் பழைய
விலை புதிய
விலை
டெல்லி ரூ.903 ரூ.803
மும்பை ரூ.902.50 ரூ.802.50
கொல்கத்தா ரூ.929 ரூ.829
சென்னை ரூ.918.50 ரூ.818.50
சேலம் ரூ.936.50 ரூ.836.50

* 10 ஆண்டில் இருமடங்கு அதிகரிப்பு
2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி நிறைவுபெற்ற நேரத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.417 என்ற நிலையில் இருந்தது. அப்போது கச்சா எண்ணெய் விலையானது, பீப்பாய் விலை 74 டாலராக இருந்தது. சிலிண்டருக்கு மானியமாக ரூ.400ஐ காங்கிரஸ் அரசு வழங்கியதால், மக்களுக்கு ரூ.417க்கு வழங்க முடிந்தது. பாஜ ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர், சிலிண்டர் விலை ராக்கெட் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்தது. தற்போது ரூ.950 என்ற ரீதியில் விற்கப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெய் விலையானது, சர்வதேச சந்தையில் சராசரியாக பீப்பாய் 78 முதல் 82 டாலர் வரை விற்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற வகையில் சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் மக்களுக்கான மானியத்தையும் ஒன்றிய அரசு குறைத்து விட்டது. அதாவது சிலிண்டருக்கு ரூ.39.81 மட்டுமே மானியமாக வழங்கப்படுகிறது.

The post 417 ரூபாயாக இருந்ததை ரூ.919க்கு ஏற்றிவிட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: 9 ஆண்டுகளாக சும்மா இருந்த பின் மகளிர் தினத்துக்காக குறைத்ததாக இப்போது மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Women's Day ,Salem ,Federation of Oil Companies ,Dinakaran ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...