ஊட்டி: கொடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை நடந்த கொடநாடு பங்களாவில் நேற்று முன் தினம் சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை குறித்து நீதிபதி அப்துல் காதர் கேட்டறிந்தார். கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு குறித்து நீதிபதி விசாரணை மேற்கொண்டார். பின்னர் கொலை குற்றம் நடந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post கொடநாடு எஸ்டேட்டில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்யலாம்: ஊட்டி நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.