×

கூடுதல் பிட் லைன் அமைத்தும் பலன் இல்லை: கொச்சுவேளி – நீலாம்பூர் ரயில் கழுவி சுத்தம் செய்ய நாகர்கோவில் வரை நீட்டிப்பு

நாகர்கோவில்: கொச்சுவேளி – நீலாம்பூர் ரயிலை கழுவி சுத்தம் செய்வதற்காக நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்திருக்கிறார்கள் என பயணிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 என 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தற்போது மேலும் 2 பிளாட்பாரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களின் எண்ணிக்கை 6 ஆக உயரும். ஏற்கனவே ரயில்கள் பராமரிப்பு வசதிக்காக 2 பிட் லைன்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 5 பிட்லைன்கள் உள்ளன. நாகர்கோவில் – திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணி முடிவடைந்துள்ளது.

நாகர்கோவில் டவுன் – கன்னியாகுமரி வரையிலான இரட்டை ரயில் பாதை பணியும் முடிவடைந்து சோதனை ஓட்டத்துக்கு தயாராகி வருகிறது. இவ்வாறு கூடுதல் பிட்லைன்கள், கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்படுவதால் தென் மாவட்ட மக்கள் பயன்ெபறும் வகையில், கன்னியாகுமரி அல்லது நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தாம்பரம் – ஐதராபாத் இடையிலான சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை, கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

நாகர்கோவில் – சென்னை பகல் நேர வந்தே பாரத், கன்னியாகுமரி – சென்னை இரவு நேர வந்தே பாரத், நாகர்கோவில் – தாம்பரம் ரயில் தினசரி ரயிலாக மாற்றம், திருவனந்தபுரம் – மங்களூரு ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குமரி மாவட்ட மக்கள் வலியுறுத்தி வரும், நிலையில், கொச்சுவேளி – நீலாம்பூர் ரயிலை நாகர்கோவில் – கொச்சுவேளி மார்க்கம் பயணிகள் ரயிலாக இயக்கி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்புக்காக கொண்டு வந்துள்ளனர்.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்கு கீழ், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வருவதால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தை, கேரளாவில் இயக்கப்படும் ரயில்களை கழுவி சுத்தம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஏற்கனவே குமரி மாவட்ட பயணிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், கொச்சுவேளி – நீலாம்பூர் ரயில் நாகர்கோவில் வரை வந்து சுத்தம் செய்வதன் மூலம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கேரள ரயில்களின் கக்கூஸ் என்று திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக நிரூபிக்கப்பட்டு உள்ளதாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் செயலாளர் எட்வர்ட் ெஜனி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கன்னியாகுமரி – திப்ருகார் ரயில் இவ்வாறு நாகர்கோவிலில் பராமரிப்புக்கு என்று கொண்டு வரப்பட்ட ரயில் ஆகும். புதிய பிட் லைன் கொண்டு வந்த பிறகு இதுவரை 2 ரயில்கள் பராமரிப்புக்காக நாகர்கோவில் வந்துவிட்டது. திருவனந்தபுரம் கோட்டத்தின் சார்பாக இன்னும் பல்வேறு ரயில்களை நாகர்கோவிலுக்கு பராமரிப்புக்கு என்று கொண்டு வரும் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு வந்தால் இந்த புதிய பிட்லைன் அமைக்கப்பட்ட பின் குமரி மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்க போவதில்லை. முழுக்க முழுக்க கேரளா மார்க்கம் செல்லும் ரயில்களை கழுவி, துடைக்கும் இடமாகவே நாகர்கோவில் ரயில் நிலையம் இருக்கும் என்றும், ரயில் பயணிகள் வேதனையுடன் கூறினர்.

நீலாம்பூர் ரயிலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு கொண்டு வருவதற்கு ரயில்வே துறை மறைமுக ஓர் திட்டத்தை தயார் செய்தது. அதன்படி திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயிலில் கொச்சுவேளி – நீலாம்பூர் ரயிலின் பெட்டிகளை கொண்டு இயக்க முடிவு செய்தனர். இந்த ரயில் பயணிகள் ரயிலாக நாகர்கோவில் வந்து விட்டு இங்கு பிட் லைனில் பராமரிப்பு செய்து விட்டு மாலையில் பயணிகள் ரயில் கொச்சுவேலி சென்று பின்னர் கொச்சுவேளி – நீலாம்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலாக புறப்பட்டு செல்லும். இவ்வாறு செய்யும் போது கொச்சுவேலி ரயில் நிலையத்தில் பராமரிப்பு இடங்கள் காலி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பராமரிப்பு காலி ஏற்படுவதை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து கேரளா பயணிகள் வசதிக்காக புதிய ரயில்கள் இயக்கப்படும் என்கிறார்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக திருவனந்தபுரம் – மங்களூரு (வண்டி எண் 16347/16348) ரயிலை திருநெல்வேலி அல்லது நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலாம்பூர் ரயிலை பராமரிப்புக்கு என நாகர்கோவில் வரும் போது இந்த மங்களூரு ரயிலை நீட்டிப்பு செய்து நாகர்கோவில் பராமரிப்பு பணிகள் செய்ய முடியாத நிலை ஏற்படும். திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும் ரயில்களை நீட்டிப்பு செய்யாமல் கேரள மக்களின் பயன்பட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று, குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர் ராம் குற்றம் சாட்டி உள்ளனர்.

The post கூடுதல் பிட் லைன் அமைத்தும் பலன் இல்லை: கொச்சுவேளி – நீலாம்பூர் ரயில் கழுவி சுத்தம் செய்ய நாகர்கோவில் வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Kochuveli ,Neelampur ,Nagercoil ,Nagercoil Junction ,1A ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு