×

ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம்: டெல்லியைச் சேர்ந்த தரகர் மட்டும் 180 மாணவர்களை அனுப்பியது சிபிஐ விசாரணையில் அம்பலம்!!

டெல்லி: ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் தாக்குதல் நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் அதனை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. இந்த போரில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சில இந்தியர்கள் சிக்கிக் கொண்டனர். ஒன்றிய அரசின் முயற்சியால் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதே போல இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர், ரஷ்ய ராணுவத்திடம் சிக்கி கொண்டதாக வீடியோ வெளியானது. எனவே இந்த விசாரணையை சிபிஐ தொடர்ந்தது.

ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம்: அதிர்ச்சி தகவல்
ரஷ்ய பல்கலை.களில் சலுகை கட்டணத்தில் சேர்ப்பதாகக் கூறி ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்த விவகாரம் தொடர்பாக, டெல்லியைச் சேர்ந்த ஒரு தரகர் மட்டும் 180 மாணவர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது சிபிஐ விசாரணையில் அம்பலமானது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவ உடையில் இந்தியர்கள் இருந்த வீடியோ வெளியான நிலையில் சிபிஐ டெல்லி, மும்பை, சென்னை, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரஷ்ய பல்கலை.களில் சேர்ப்பதாக கூறி அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சலுகை கட்டணத்தில் படிப்பு, இலவச விசா என ஆசைவார்த்தை கூறி ரஷ்யாவுக்கு மாணவர்களை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள்: சிபிஐ வழக்குப்பதிவு
மதுரையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா, சென்னையைச் சேர்ந்த ரமேஷ்குமார் உள்பட 19 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. நல்ல ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் பட்டதாரி இளைஞர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்களை ரஷ்யா பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ரஷ்யாவுக்கு ஆள் சேர்த்த விவகாரம்: டெல்லியைச் சேர்ந்த தரகர் மட்டும் 180 மாணவர்களை அனுப்பியது சிபிஐ விசாரணையில் அம்பலம்!! appeared first on Dinakaran.

Tags : Russia ,Delhi ,Russian Federation ,Ukraine ,CPI ,Dinakaran ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்