×

4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை காவல் அதிகாரிகள் திறம்பட கையாளுவதற்காக மாநில காவல் படைகளின் நவீனமயமாக்கல் (MPF) திட்டத்தின் கீழ் மெகா சிட்டி திட்டம் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 1,030 இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிறுவப்பட்ட 3090 AI ஆல் இயங்கும் CCTV கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 7 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் நகரம் முழுவதும் விரிவான கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது.

முதல் கட்டத்தில், 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்கள் நகர கண்காணிப்புக்காக பயன்படுத்த தயாராக உள்ளது. மேலும் 2,250 கேமராக்கள் மற்றும் 650 வாகனங்கள் நிகழ்நேர கண்காணிப்பிற்காக தானியங்கி வாகன இருப்பிட அமைப்புடன் (AVLS) நிறுவப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு, நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள ட்ரோன்கள் மற்றும் CCTV கேமராக்கள் நிகழ்நேர விடியோ பதிவுகளை அனுப்புகின்றன. MCCC வாகனங்கள் நகரம் முழுவதும் முக்கியமான பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் இடங்களில் நிறுத்தப்பட்டு ஒரு சம்பவத்தின் நிகழ்நேர வீடியோவை பதிவு செய்ய தேவைக்கேற்ப பயன்படுத்தப்படும்.

MCCC ல் நிலைநிறுத்தப்பட்டுள்ள ட்ரோன்கள், (இரண்டு நைட் விஷன் ட்ரோன் ஒருங்கிணைந்த கேமராக்கள் மற்றும் ஒலிப்பெருக்கி அமைப்புகள் உட்பட) மேம்பட்ட சூழ்நிலை விழிப்புணர்விற்கான வான்வழி பார்வையை வழங்குகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்யவும் பயன்படுத்தப்படும். இந்த அம்சங்கள் அவசர காலங்களில் திறமையான தகவல்தொடர்புக்கு பயன்படும். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதற்கட்டமாக 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மை செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., சென்னை பெருநககர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) பிரேம் ஆனந்த் சின்கா, இ.கா.ப., மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய (MCCC) வாகனங்களின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : 4 Movable Command and Control Centre ,MCCC ,Chief Minister ,K. Stalin ,Chennai ,H.E. K. Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...