×

திருப்பதி, சுற்றுவட்டார பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் வீடுகளில் திருடும் பலே திருடன் கைது

*ரூ.8 லட்சம் மதிப்பு தங்க நகைகள் பறிமுதல்

திருப்பதி : திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் வீடுகளில் திருடும் பலே திருடனை போலீசார் கைது செய்து, ₹8 லட்சம் மதிப்பிலான 114 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து திருடர்களை பிடிக்க திருப்பதி எஸ்பி கிருஷ்ண காந்த் படேல் உத்தரவிட்டார். அதன்பேரில், திருப்பதி குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி விமலா குமாரி, திருப்பதி டிஎஸ்பி சுரேந்திரா மேற்பார்வையில் அலிபிரி சிஐ ராமச்சந்திர ரெட்டி, எஸ்ஐக்கள் ராஜசேகர், ராமசாமி, அலிபிரி காவல் நிலைய தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, திருப்பதி கரக்கம்பாடி சாலை திம்மி நாயுடு பாளையம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை பிடித்து விசாரணை செய்ததில், திருப்பதி ஜீவ கோணா பகுதியைச் சேர்ந்த வரதராஜுலு மணி(30) என்பதும், இவர் திருப்பதி சுற்றியுள்ள பகுதியில் நோட்டமிட்டு இரவில் வீடுகளில் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

மேலும் ஏற்கனவே பலமுறை திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பதும், திருப்பதி எம்ஆர் பள்ளி பகுதியில் வீடுகளில் திருடிய நகைகளை சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திருப்பதியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்தபோது, போலீசில் சிக்கிகொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ₹8 லட்சம் மதிப்பிலான 114 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருப்பதி, சுற்றுவட்டார பகுதிகளில் நோட்டமிட்டு இரவில் வீடுகளில் திருடும் பலே திருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupati ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது