×

சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் குறித்து உண்மைத்தன்மை அறியாமல் மக்கள் பரப்ப வேண்டாம்

*மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் பேட்டி

ஊட்டி : சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள், வீடியோக்கள் போன்றவற்றின் உண்மைத்தன்மை குறித்து அறியாமல் பொதுமக்கள் அதனை பரப்ப வேண்டாம் என மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களால் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்களது உடல் உறுப்புகள் திருடப்படுவதாக வீடியோக்கள் வாட்ஸ்-அப்பில் பரவியது. இது வதந்தி தான், பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாமென தமிழ்நாடு காவல் துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வதந்தியை உண்மை என நம்பியவர்கள் சென்னையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் மலை மாவட்டமான நீலகிரியில் கட்டுமானம், ஓட்டல், தேயிலை தோட்டங்கள் என பல்வேறு இடங்களில் சுமார் 12 ஆயிரம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வதந்தி காரணமாக அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதை தவிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீலகிரி மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமூக வலை தளங்களில் பரப்பபடும் செய்திகளை உண்மை தன்மை குறித்து அறியாமல் அவற்றை பரப்ப வேண்டாம் என மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று ஊட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட கூடிய செய்திகள், தகவல்கள் சரியானவையா, தவறானதா என்பதை உறுதி செய்யாமல் அவற்றை பரப்புகின்றனர். இதனை உண்மையென நம்பும் சிலர், அவர்களாகவே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு சம்பந்தப்பட்ட அப்பாவி நபர்களை தாக்க கூடிய சம்பவங்கள் மாநிலத்தில் ஒரு சில இடங்களில் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் செய்திகள் உண்மை தானா என்பதை உறுதி செய்த பின்னரே பரப்ப வேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பபடும் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால் காவல்துறையினரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்கலாம்.

மேலு பரப்பபடும் போலியான தகவல்களை நம்பி அப்பாவியான நபர்களை தாக்குவது தவறு. தவறு செய்தவர்களை தாக்குவதை தவிர்த்து காவல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். பொதுமக்களுக்கு சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் அதுகுறித்து தகவல்களை அறியவும், சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க 97898 00100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். இதுதவிர தேர்தல் தொடர்பான உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர்வதைவும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு எஸ்பி கூறினார்.

The post சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் குறித்து உண்மைத்தன்மை அறியாமல் மக்கள் பரப்ப வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : District ,SP ,Sundaravadivel ,District SP ,northern states ,Tamil Nadu ,
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது