×

தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் கூடுதல் டாக்டர்கள்

* அதிகளவில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்

* ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவைமுன்னிட்டு பொது மக்களுக்கு உரிய வசதிகளை அலுவலர்கள் செய்து கொடுத்திட வேண்டும் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டம் என்பது ஆரம்ப காலத்தில் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அதன்பின்னர் காலபோக்கில் நிர்வாக வசதி மற்றும் பொருளாதார வசதியை கணக்கில் கொண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டு வந்தது.

நடப்பாண்டிலும் இந்த பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரமானது வரும் 21ம் தேதி வரும் நிலையில் இந்த தேதியில் தேரோட்டம் நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர பெருவிழாவானது வழக்கமாக தைபூசம் நாளில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் துவங்கும் நிலையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இந்த பந்தகால் முகூர்த்தமானது நடைபெற்றது. மஹாத்துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது.

விழாவை சிறப்பாக நடத்துவது மற்றும் பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உரிய வசதிகளை செய்துகொடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையிலும், எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், எஸ்.பி ஜெயக்குமார், டி.ஆர்.ஓ சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும், பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீசார் செய்திட வேண்டும். நகராட்சி சார்பில் குடிநீர் இணைப்புகளில் தேர் விழா நாளுக்கு 2 நாள் முன்னதாகவும், 2 நாள் பின்னதாகவும் கூடுதலாக ஒரு மணிநேரம் தண்ணீர் வழங்குதல், 4 வீதிகளிலும் குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறை வசதி செய்திட வேண்டும்.

தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டியுடன் வரவேண்டும். மின்துறையினர் தேர் திருவிழாநாளுக்கு 3 நாள் முன்னும், பின்னும் நகருக்கு உள்ளும் கோயிலுக்குள்ளும் மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.நெடுஞ்சாலைத்துறையினர் தேரோடும் வீதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள வீதிகளில் அமைந்துள்ள மரக்கிளைகள் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.

வேளாண்மை பொறியியல் துறையினர் தேர் விழாவிற்கு தேவையான புல்டோசர்களை வழங்க வேண்டும் என்பதுடன் மருத்துவத்துறையின் சார்பில் தேர் விழா நாளுக்கு 3 நாட்கள் முன்னும், பின்னும் திருவாரூர் மாவட்ட மருத்துவமனையில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்திட வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு சிறப்பு பேருந்து வசதி செய்திட வேண்டும். மொத்தத்தில் தேர் திருவிழாவில் தொடர்புடைய அரசு துறையினர் அனைவரும் தங்களது பணிகளை சிறப்புடன் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் கோயிலின் பரம்பரை அறங்காவலர் தர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராமு, கோயில் செயல் அலுவலர் அழகியமணாளன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

* தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டியுடன் வரவேண்டும்.

* மின்துறையினர் தேர் திருவிழாநாளுக்கு 3 நாள் முன்னும், பின்னும் நகருக்கு உள்ளும் கோயிலுக்குள்ளும் மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

The post தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு 24 மணி நேரமும் கூடுதல் டாக்டர்கள் appeared first on Dinakaran.

Tags : Azhitherot ,Thyagaraja Swamy ,Temple ,Thiruvarur ,Tiruvarur Thiagaraja Swamy temple ,Azhitherota ,
× RELATED லாடனேந்தல் வீரமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா