×

முதல்வர் 11ம் தேதி வருகை 3 மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

*முன்னேற்பாடுகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரிக்கு வரும் 11ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் வருகை தர உள்ளதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகளை வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில், வரும் 11ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ஏற்கனவே முடித்த வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட விழாக்கள் நடக்கிறது.

இவ்விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ஏற்கனவே முடித்த பணிகளை, தொடங்கி வைக்கிறார். இந்த விழாவிற்காக தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஏற்பாடுகளையும், விழாவிற்கான முன்னேற்பாடுகளையும் பார்வையிட வேளாண் துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று மாலை தர்மபுரிக்கு வந்தார்.

விழாவிற்கு தேர்வு செய்யப்பட்ட இடம், பிரமாண்ட பந்தல் அமைக்கும் இடம், மேடை அமைக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் வரும் 11ம் தேதி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வருகை தருகிறார். அவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு தர்மபுரியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர், எஸ்பி மற்றும் அரசு அதிகாரிகளுடன், விழா நடக்கவுள்ள இடத்தை பார்வையிட்டுள்ளோம். வழங்குகிறார். இந்த விழாவில், 2.80 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்வர் வழங்குகிறார். கட்டணமில்லாமல் பஸ்சில் பயணம் செய்யும் திட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பட்டா கேட்டு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு பட்டா வழங்கப்பட உள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வரும் 11ம் தேதி, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தொகுப்பு-2 செயல்படுத்த ஆய்வு பணிகள் மேற்கொள்ள, ஜப்பான் நாட்டு (ஜிகா) அதிகாரிகள், தர்மபுரிக்கு வருகை தர உள்ளனர். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். இந்த ஆய்வின் போது, தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன், நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post முதல்வர் 11ம் தேதி வருகை 3 மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Panneerselvam ,Dharmapuri ,MRK Panneerselvam ,Dinakaran ,
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்