×

ஊட்டி எல்லையை விரிவுபடுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊட்டி : ஆட்டோக்களின் எல்லையை விரிவுபடுத்தக்கோரி ஊட்டியில் ஆட்டோ ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இங்கு ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா கார்கள் அதிகளவு இயக்கப்படுகிறது. ஊட்டி நகரில் மட்டும் 1,300 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.

நாளுக்கு நாள் ஆட்டோ பெர்மிட்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆட்டோக்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தினாலும், புதிதாக வரும் ஆட்டோக்களுக்கு ஸ்டாண்டுகள் வழங்குவதற்காக ஆட்டோக்களின் எல்லையை 30 கி.மீ தூரம் நீட்டித்து வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எல்லையை விரிவுபடுத்தி தரப்படவில்லை. இந்நிலையில், ஊட்டியில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எல்லையை விரிவுபடுத்தி 30 கி.மீ தூரமாக நீட்டிப்பு செய்து வழங்க வேண்டும். ஸ்டாண்டுகள் அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நேற்று ஊட்டியில் ஏடிசி பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மேலும் கோரிக்கைகளை வலியுறத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

The post ஊட்டி எல்லையை விரிவுபடுத்தக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Ooty border ,Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்