*கலெக்டர் வழியனுப்பி வைத்தார்
கிருஷ்ணகிரி : கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு சுற்றுலா பயிற்சியில் பங்கேற்கும் 150 பெண் விவசாயிகளை, கலெக்டர் நேற்று வழியனுப்பி வைத்தார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம், தளி, பர்கூர் மற்றும் வேப்பனஹள்ளி வட்டாரங்களில் உள்ள சுயஉதவிக் குழுவை சேர்ந்த 150 பெண் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் திறன் மேம்பாட்டு சுற்றுலா பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். 3 பஸ்களில் சென்ற அவர்களை, கலெக்டர் சரயு நேற்று வழியனுப்பி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம், நிலத்தடி நீர் மற்றும் நீர் ஆதாரத்தை பெருக்கும் நோக்கத்திலும், மழைநீரை சேமிக்கும் நோக்கத்திலும் கிராமப் பகுதிகளில் இயற்கையாக இருக்கும் நீரோடைகளின் குறுக்கே தடுப்பணைகள், நீர் உறிஞ்சும் குழிகள், பழைய குட்டைகளை புனரமைத்தல், புதிய கசிவுநீர் குட்டைகள் மற்றும் இயற்கை வள மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், பண்ணை உற்பத்தி பணிகளில் பழமரக்கன்றுகளான மா, கொய்யா, எலுமிச்சை, நாவல், பெருநெல்லி போன்ற வகைகளும், நீராதாரம் மிகவும் குறைந்த மானாவரி பகுதிகளில் வறட்சியை தாங்கும் மகாகனி, தேக்கு, புங்கன் மற்றும் பிற வகைகள், விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் நீர்வடிப்பகுதி குழுக்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், உழவர் பயிற்சி இதண இயக்குனர் அறிவழகன், வேளாண் அலுவலர் சீனிவாசன், வேளாண் உதவி இயக்குனர் சகாயராணி, தவ்லத் பாஷா, இனியன், தமிழரசி, சுப்பிரமணி, சரவணன், செல்வம், பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியை கிருஷ்ணகிரி யு.டி.ஐ., டிரஸ்ட் நிறுவனம் ஒருங்கிணைத்தது.
The post கோவையில் நடைபெறும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் 150 பெண் விவசாயிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.