×

சமூக வலை தளங்களில் குழந்தைகள் கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் சிறை

*சிறப்பு குழுவினர் கண்காணிப்பு: எஸ்.பி சுந்தரவதனம் பேட்டி

நாகர்கோவில் : குமரியில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதுபற்றி சமூக வலை தளங்களில் வதந்தி பரப்பினால், சிறைத் தண்டனை கிடைக்கும் என எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகர்கோவிலில்எஸ்.பி சுந்தரவதனம் நிருபர்களிடம் கூறியதாவது: குமரியில் இரு இடங்களில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார்கள் வந்தன. போலீசார் விசாரணையில், அவர்கள் இருவரும் மனநலம் பாதித்தவர்கள். அதனுடன் இணைந்து பரப்பப்படும் காட்சிகள், வெளிமாநிலத்தில் எடுக்கப்பட்ட பழைய காட்சிகளாகும். எனவே குழந்தைகள் கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால், சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதற்காக எஸ்.பி அலுவலகத்தில், சிறப்பு கண்காணிப்பு குழுவினர் சமூக வலைதள பதிவுகளை கண்காணித்து வருகின்றனர். எனவே குழந்தைகள் கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால், சட்டப்படி நடவடிக்ைக மேற்கொள்ளப்படும். கைது மற்றும் சிறை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். வதந்தி பரப்புபவர்கள் குறித்து, பொதுமக்களும், 100 எண்ணிற்கோ, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம்.

விபத்துகளை தவிர்ப்பதற்கே சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிலும், மோதி விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு இரவில் அப்பகுதியில் போதிய தெரு விளக்கு வெளிச்சம் இன்மையும் ஒரு காரணம். தற்போது, சென்டர் மீடியன் பகுதிகளில் விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று (7ம் தேதி) 16 இடங்களில் பகலிலும் ஒளிரும் வகையிலான ஸ்டெம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுபோல் அனைத்து சென்டர் மீடியன்களிலும் அமைக்கப்படும்.

இதுதவிர சென்டர் மீடியன் இருப்பதை அறிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். கான்கிரீட் பலகைகளுக்கு பதிலாக, பி.வி.சி மூலம் சென்டர் மீடியன் அமைக்க மாநகராட்சியுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதட்டமான வாக்குசாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இது நிறைவு பெற்றதும், தேவையான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும், கொடி அணிவகுப்பும் நடத்தப்படும். மண்டைக்காடு கோயில் பாதுகாப்பு பணிக்கு தற்போது 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

நிறைவு விழாவின் முந்தைய 4 நாட்கள், எனது மேற்பார்வையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 8 டிஎஸ்பிக்கள், 16 இன்ஸ்பெக்டர்கள் ஒள்பட 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். சிவலாய ஓட்டத்தை முன்னிட்டு, 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பணிகளுக்கான வாகனங்களுக்கு தடையில்லை

டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்தை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். கேரள செல்லும் டாரஸ்களுக்கு சலுகை காட்டப்படவில்லை. குமரியில் அரசு பணிகளுக்கு கனிமங்கள் கொண்டு வரும் லாரிகள் எண்களை அளித்தால், அவற்றை காக்க வைக்காமல் சோதித்து அனுப்பி வைக்கப்படும். தற்போது ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் உள்பட 3 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கு தலா 10 போலீசார் பணியில் உள்ளனர் என்று எஸ்.பி சுந்தரவதனம் கூறினார்.

சுற்றுலா தலங்களில் மாணவிகள் பலாத்காரமா?

சொத்தவிளை, கரும்பாறை உள்பட சுற்றுலா தலங்களில், தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை சிலர், குறிவைத்து தாக்கி, பலாத்கார சம்பவத்தில் ஈடுபடுவது பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் தகவல் குறித்து எஸ்.பியிடம் கேட்டபோது, குமரியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்று அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியிலும், கடந்த வாரம் இதுபோன்ற புகார் வந்துள்ளது.

எனவே கன்னியாகுமரி முதல் ஈத்தாமொழி வரை போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள். மப்டியிலும் சென்று கண்காணிப்பார்கள். சம்பவம் தெரிய வந்தால், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால், வெளியே தெரிந்து விடும் என அஞ்சினாலும், அவர்களிடம் பேசி, புகார்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கரும்பாறை பகுதியும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்றார்.

The post சமூக வலை தளங்களில் குழந்தைகள் கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் சிறை appeared first on Dinakaran.

Tags : SB Sundaravathanam ,Nagercoil ,Kumari ,SP Sundaravathanam ,
× RELATED சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க...