×

22ம் தேதி வரை நடக்கிறது ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி மே 17ம் தேதி துவக்கம்

*கலெக்டர் அறிவிப்பு

ஊட்டி : ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி துவங்கி 22-ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்தார்.
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே கோடை காலத்தின் போது சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், இதமான காலநிலையை அனுபவிக்க அதிகளவு சுற்றுலா பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுப்பது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி மற்றும் காய்கறி காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.
இது தவிர, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். இந்நிலையில், இந்தாண்டு மலர் கண்காட்சி உள்ளிட்ட கோடை விழா நடத்துவது குறித்த ஆலோனை குழு கூட்டம் கடந்த 1-ம் தேதி கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

தோட்டக்கலைத்துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இணைய வழி மூலம் நடந்தது. இதில், நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், 126வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 6 நாட்கள் நடத்துவது எனவும், 64-வது பழக்கண்காட்சி மே மாதம் 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை 3 நாட்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் அருணா கூறியதாவது: ஆண்டு தோறும் கோடை விழா ஊட்டியில் சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு 126-வது மலர் கண்காட்சி வரும் மே மாதம் 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை 6 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 64வது பழக்கண்காட்சி வரும் மே மாதம் 24ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை மூன்று நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த பின், அதனை பொறுத்து காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் வாசனை திரவிய கண்காட்சிகள் நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இம்முறை கோடை சீசனின் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஏற்கனவே இரு கூட்டங்கள் அதிகாரிகளை கொண்டு நடத்தப்பட்டுள்ளது. இம்முறை சுற்றுலா தலங்களில் தொட்டிகள் மூலம் குடிநீர் வைத்து விநியோகம் செய்யப்படும். அனைத்து கழிப்பிடங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், சுற்றுலா தலங்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் மாவட்டத்திற்குள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். அப்போது தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிபிலாமேரி மற்றும் உதவி இயக்குநர் பாலசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சிறுதானிய அரங்கு அமைப்பு

மலர் கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி நடத்தப்படும் நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களை கொண்டு முதன் முறையாக சிறு தானிய அரங்கு அமைக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த விலையில், சிறுதானிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்தார்.

The post 22ம் தேதி வரை நடக்கிறது ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி மே 17ம் தேதி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : 126th Flower Fair in Ooty ,Ooty ,126th flower exhibition ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்