×

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க தில்லியில் நேற்று நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் 6 மாதங்களுக்கு இதுவரை உயர்த்தப்படவில்லை. 2023ஆம் ஆண்டின் கடைசி 6 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை கடந்த அக்டோபர் மாதத்தில் தான் தமிழக அரசு அறிவித்தது. அதற்கு முன்பு வரை ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்து 6 மாதங்களுக்குப் பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதியத்தை தமிழக அரசு உயர்த்தி வந்தது. இப்போதும் அதேபோல், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தாமதப்படுத்தக் கூடாது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியிடப்பட்டு விட்டால், அதன்பிறகு ஜூன் மாதத்தில் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியாது. எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பாக , அமைச்சரவையைக் கூட்டி 4% அகவிலைப்படி உயர்வை வழங்க முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இந்தியாவில் 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

The post தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Anbumani Ramadas ,Chennai ,Tamil Nadu ,Tamil government ,Union government ,Dinakaran ,
× RELATED பாதாள சாக்கடைகளில் மனிதர்கள்...