×

தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு… ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி!!

ஜெனீவா : இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் 55வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் வோல்கர் ட்ர்க், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி முயற்சிகள் அனைத்தும் சமூகங்கள் செழிக்க வெளிப்படைத்தன்மை அவசியம் என்பது குறித்தும் பேசினார். நடப்பு ஆண்டில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளதால் வெளிப்படைத்தன்மை குறித்த கண்ணோட்டம் முக்கியமானது என்றும் அவர் கூறினார். ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் தேர்தல் குறித்து பேசிய அவர், இந்தியாவின் குடிமக்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பதாக கூறினார்.

மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் குறிவைக்கப்படுவது மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “960 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல் தனித்துவம் கொண்டது. நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக மரபுகள் மற்றும் அதன்பன்முகத்தன்மையை நான் பாராட்டுகிறேன். இருப்பினும், இந்தியாவில், குடிமக்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தேர்தலுக்கு முன்பாக வெளிப்படையான சூழலை உருவாக்குவது மிகவும் அவசியம். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் வரவேற்கத்தக்கது, “இவ்வாறு தெரிவித்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அரிந்தம் பக்ஷி அதிருப்தி தெரிவித்துள்ளார். வோல்கர் டர்க்கின் அறிக்கை தேவையற்றது என்று கூறிய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதார்த்தத்தை அது பிரதிபலிக்கவில்லை என்று கூறினார்.

The post தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு… ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி!! appeared first on Dinakaran.

Tags : UN ,India ,Human Rights Commission ,Geneva ,Lok Sabha ,UN Human Rights Council ,Human ,Rights Commissioner ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...