×

மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வறிக்கை

சேலம், மார்ச் 8: சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளை ஆய்வு செய்து விரைந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதனால், தேர்தல் முன்னேற்பாடு பணிகளை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள் செய்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஓமலூர், இடைப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி சட்டமன்ற தொகுதிகளும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மேட்டூர் சட்டமன்ற தொகுதியும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு சங்ககிரி சட்டமன்ற தொகுதியும் வருகிறது.

இந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்துள்ளோம். அதனை அனைத்து அலுவலர்களும் பின்பற்ற வேண்டும்.

அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கடந்த நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பதற்றமான வாக்குச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு இருக்கக்கூடிய சூழ்நிலைகளை ஆராய்ந்து உரிய ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் பொறுப்பு அலுவலர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்வதுடன், தங்களுக்கு கீழ் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை அளிக்க வேண்டும்.

குறிப்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வழங்கப்படும் வாக்குப்பதிவிற்கு தேவையான வாக்குச்சாவடி பொருட்களை முறையாக வாக்குப்பதிவு மையங்களுக்கு ஒப்படைப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறை பாதுகாப்புடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வைப்பு அறைகளுக்கு முறையாக கொண்டு செல்லுதல், வாக்குச்சாவடிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டரில் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் அம்பாயிரநாதன் (சேலம்), லோகநாயகி (சங்ககிரி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகன் உள்பட மண்டல அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரம் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஆய்வறிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Collector ,Brindadevi ,Dinakaran ,
× RELATED பேருந்துக்கு காத்திருந்த...