×

வெளி மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவது போன்ற பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை

 

திருப்பூர், மார்ச் 7: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபிநபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெளி மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் இது போன்ற காணொலிகளையும், செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.

போலியான செய்திகளை கேட்டும், காணொலிகளை பார்த்தும் பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ, பதற்றமடையவோ வேண்டாம். இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருப்பூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 94981-81209 அல்லது 100க்கு அழைக்கலாம். எனவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, பரப்பவோ வேண்டாம்.

இது போன்று தவறான, பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். எஸ்பி தகவல்: திருப்பூர் மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சமீபகாலமாக வெளி மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் பரப்பி வருவதை பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் திருப்பூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி எண் 9498181208, மாவட்ட தனிப்பிரிவு அலுவலக எண் 9498101320 அல்லது 100க்கு அழைக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வெளி மாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துவது போன்ற பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Municipal Police Commissioner ,Pravin Kumar Abhinabhu ,Tamil Nadu ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...