×

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

புதுச்சேரி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது, கஞ்சா போதை ஆசாமிகள் கடத்தி சென்றனர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கால்வாயில் வீசி உள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டையை சேர்ந்த விவேகானந்தன் (57), கருணா (எ) கருணாஸ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கொலைக்கு காரணமான போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்காத என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்தும், சிறுமிக்கு விரைவில் நீதி கேட்டும், கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தியும் கடந்த 2 நாட்களாக பல்வேறு அமைப்புகள், பெண்கள், மாணவர்கள், வியாபாரிகள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் நகர் முழுவதும் மறியல், ஆர்ப்பாட்டம், காவல் நிலையம் முற்றுகை, ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியால் புதுவையே ஸ்தம்பித்தது. சிறுமியின் படுகொலைக்கு ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் சிறுமியின் உடல் அவரது பெற்ேறாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் தமிழிசை சிறுமியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அவரை சிறைபிடித்து வெளியேறு…வெளியேறு… என மக்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமியின் இறுதி ஊர்வலம் நேற்று காலை 10 மணியளவில் நடந்தது. இந்த ஊர்வலத்தில் முத்தியால்பேட்டை எம்எல்ஏ பிரகாஷ்குமார், அதிமுக மாநில செயலாளர் முன்னாள் எம்எல்ஏ அன்பழகன், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது வழியெங்கும் திரண்ட பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்று சிறுமியின் உடலுக்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வலத்தின்போது முதல்வர், அமைச்சர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாததற்கு கண்டனம் தெரிவித்தனர். ேமலும் புதுச்சேரி அரசு அறிவித்த ₹20 லட்சம் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ₹1 கோடி வழங்க வேண்டுமென்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சோலைநகர் புறக்காவல் நிலையம் அருகே ஊர்வலம் வந்தபோது அங்கு நின்றிருந்த போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக சிலர் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி ஊர்வலம் நடைபெற்ற வைத்திக்குப்பத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

ஊர்வலத்தின்போது எந்த கலவரமும் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். சீனியர் எஸ்பி சுவாதி சிங், எஸ்பிக்கள் பக்தவச்சலம், ரக்சனாசிங், செல்வம், வீரவல்லவன் தலைமையில் மற்றும் 200க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறுமியின் கொடூர மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நகரம் முழுவதும் ஆங்காங்கே இரங்கல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மெழுகுவர்த்தி ஏற்றியும், சிறுமியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் புதுவை மற்றும் முத்தியால்பேட்டை பகுதியில் பல பள்ளிகளின் வாசலில் சிறுமியின் உருவப்படம் வைக்கப்பட்டு மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.சிறுமி பயன்படுத்திய பொருட்கள் புத்தகம், பொம்மை, உடை, பை பொருட்கள் என சிறுமியின் உடலோடு நல்லடக்கம் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
கைதான கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகிய இருவரையும் நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று காலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும், வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் குவிந்திருந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகளை நீதிமன்றத்தக்கு அழைத்து சென்றால் ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று எண்ணி நீதிமன்றத்தில் இருந்து அனைவரும் கலைந்து சென்றபின் கைதிகளை ஆஜர்படுத்தலாம் என போலீசார் காத்திருந்தனர். இருப்பினும் நேற்று காலை முதல் மாலை 5 மணி வரையிலும் நீதிமன்றத்தில் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் காத்திருந்ததால் குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லாமல் நேரடியாக காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு நீதிபதியை நேரில் வரவழைத்து அவர் முன் இருவரையும் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

சிறப்பு குழு விசாரணையை துவங்கியது மேலும் சிலருக்கு தொடர்பு? ரத்த மாதிரிகள் ஆய்வு
சிறுமியின் கொலையை விசாரிக்க டிஐஜி பிரிஜேந்திரகுமார் யாதவ் மேற்பார்வையில் ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் தலைமையில் எஸ்பி லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் கணேஷ், எஸ்ஐ சிவப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் நேற்று தனது விசாரணையை துவங்கினர். இவர்கள் கொலை நடந்ததாக கூறப்படும் விவேகானந்தன் வீட்டுக்கு தடய அறிவியல் துறை அதிகாரிகளுடன் சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கருணாஸ் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். மேலும், கைதான விவேகானந்தன், கருணா(எ) கருணாஸ் மற்றும் சந்தேகத்தின்பேரில் விசாரணை வளையத்திற்குள் உள்ள 5 பேரிடம் இருந்த எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக ஜிப்மருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அதிகாரி கலைவாணன் கூறுகையில், ‘முதல்கட்ட விசாரணை முடிந்து அடுத்தகட்ட விசாரணையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இவ்வழக்கில் இதுவரை 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.

இன்று பந்த் ; பஸ், ஆட்டோ ஓடாது தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை
போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்காத புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு நடக்கிறது. இதன் காரணமாக புதுவையில் இன்று தனியார் பஸ்கள் ஓடாது. பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்கள் இயங்காது. கடைகள், மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் செயல்படும். பெரும்பாலான தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. அரசு, நிதியுதவி பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். அதேபோல் இன்று பிளஸ் 2 கம்ப்யூட்டர் பிரிவு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையின்படி வழக்கம்போல் பொதுத்தேர்வு நடக்கும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

ஐபிஎஸ் அதிகாரிகள், போலீசார் கூண்டோடு மாற்றம்
சிறுமி கொலை தொடர்பாக துணை நிலை ஆளுநர் தமிழிசை, டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சீனியர் எஸ்பி, எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஐபிஎஸ் அதிகாரியான அஜித்குமார் சிங்களா ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி கலைவாணன் குற்றம் மற்றும் புலனாய்வுப்பிரிவு சீனியர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஆர்பின் கமாண்டராக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்வாதி சிங், கூடுதல் பொறுப்பாக போக்குவரத்து காவல்துறை சீனியர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை எஸ்பி ராஜசேகர வல்லட் கூடுதல் பொறுப்பாக சிக்மா செக்யூரிட்டி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்மா செக்யூரிட்டி எஸ்பி பாலச்சந்திரன் பிசிஆர் செல் எஸ்பியாகவும், கூடுதல் பொறுப்பாக காரைக்கால் வடக்கு பகுதி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த கண்ணன், முத்தியால்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். முத்தியால்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக அரியாங்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கும், சோலை நகர் புறக்காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன், அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Choli ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு