×

குஜராத் போதை மாத்திரை கும்பல் தலைவன் 24 மணி நேரத்தில் கைது: உதவியாக இருந்த மேலும் 4 பேர் சிக்கினர்

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டத்தில் போதை மாத்திரையை புழக்கத்தில் விட்ட குஜராத் கும்பல் தலைவனை 24மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டதால் பல மாவட்டங்களில் விற்பனை முற்றிலும் தடுக்கப்பட்டது. இதனால் போதை மாத்திரைகள் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கவுதம் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்குமார், அசோக்குமார் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் குஜராத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(எ)சித்திக் சவுத்திரி என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். இவர்தான் தமிழகத்துக்கு போதை மாத்திரைகளை அதிக அளவில் விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதனால் குஜராத்தில் உள்ள தினேஷ்குமாரை கைது செய்ய முடிவு செய்து, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர். இரவு 11 மணிக்கு அங்கு இறங்கியதும், குற்றவாளிகளின் இருப்பிடத்தை அவரது செல்போன் எண் மூலம் கண்காணித்தபடியே அகமதாபாத் விரைந்தனர்.

அங்கு தினேஷ்குமாரின் நண்பர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்படி நேற்று அதிகாலை 3மணிக்கு தினேஷ்குமாரின் வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். தூங்கிக் கொண்டிருந்த தினேஷ்குமாரை தட்டி எழுப்பி போலீசார் கைது செய்தனர். தமிழகப் போலீசாரைப் பார்த்ததும், அதிர்ச்சி அடைந்த தினேஷ் தனது வக்கீலுக்கு போன் செய்ய முயன்றார். மேலும் அங்குள்ள சில அரசியல்வாதிகளுக்கும் போன் செய்ய முயன்றார். போலீசார் மின்னல் வேகத்தில் அவரை கைது செய்து, ராஜ்கோட் வந்து, மீண்டும் விமானம் மூலம் கோவைக்கு நேற்று பகல் 2 மணிக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து பள்ளிப்பாளையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: குஜராத்தை சேர்ந்த தினேஷ்குமார் என்ற சித்திக்சவுத்ரி(40) கடந்த இரண்டு வருடங்களாக ஈரோட்டில் தங்கியுள்ளான். இங்கு சென்ட் விற்பனை கடை வைத்து அதில் தனது உறவினர்களான பரத்குமார், அசோக்குமார் ஆகியோரை வேலைக்கு வைத்துக்கொண்டான். அதோடு போதை மாத்திரை விற்பனை தொழிலிலும் ஈடுபட்டுள்ளான். கடந்த மாதம் ஈரோடு போலீசார் அவனது கடையில் சோதனையில் ஈடுபட்டு போதை மாத்திரை வைத்திருந்த அசோக்குமார் மற்றும் கடை ஊழியர் ஒருவரை கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் தேடுவதை அறிந்த தினேஷ்குமார் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பதுங்கினான். செல்போன் மூலம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த கவுதம், மோகன் குமார் உள்ளிட்டோருக்கு போதை மாத்திரைகளை கொரியர் மூலம் அனுப்பி விற்பனை செய்து வந்தான். மீண்டும் பள்ளிப்பாளையம் வெப்படை பகுதிகளில் போதை மாத்திரை நடமாட்டத்தை அறிந்து கவுதம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினோம். இதில் தொடர்புடைய 15 நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தோம்.

இவர்களிடம் விசாரணை நடத்தியதில் குஜராத்திலிருந்து தினேஷ்குமார் வாரம் ஒரு முறை மாத்திரைகளை கொரியரில் அனுப்பி வைத்துள்ளார். உயரதிகாரிகளின் அறிவுரைப்படி நேற்று முன்தினம் விமானம் மூலம் குஜராத் விரைந்தோம். அங்கு பதுங்கியிருந்த தினேஷ்குமாரை மடக்கி பிடித்து பள்ளிபாளையம் கொண்டு வந்தோம். வெப்படை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், போதை மாத்திரைகளை கொரியரில் அனுப்பி வைத்ததை தினேஷ்குமார் ஒப்புக்கொண்டான். இதையடுத்து அவனை கைது செய்துள்ளோம். அதேபோல் தினேஷ்குமாரிடம் மாத்திரைகளை வாங்கி புழக்கத்தில் விட்ட ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார் (33), தீபக் (25), சந்தோஷ்குமார் (22), சதாம் உசேன் (23) ஆகியோரும் ைகது ெசய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதற்கிடையே குஜராத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்து 2 ஆண்டுகளாக தினேஷ்குமார் போதை மாத்திரை விற்பனையை செய்துள்ளார். அவருக்கு பின்னால் அந்த மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மூளையாக இருந்தார்களா? அவர்களுக்கும் இந்த விற்பனைக்கும் தொடர்புள்ளதா? தமிழ்நாட்டை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்வதற்கு அவர்கள் உதவியாக இருந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குஜராத் சென்று துரித கதியில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு மக்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

போதை பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க குழு
நாமக்கல் மாவட்ட எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் கூறுகையில், ‘‘போதை மாத்திரைகளை குஜராத்திலிருந்து கொரியர் மூலம் அனுப்பி வைத்த தினேஷ்குமாரை தனிப்படை போலீசார் குஜராத்தில் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். மாவட்டத்தில் போதை மாத்திரைகள் போதை பொருள்கள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க காவல்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை கொண்ட இந்த குழு பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களை சந்தித்து போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். ஆசிரியர்கள் மத்தியிலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களின் பழக்க வழக்கங்கள் கண்காணிக்கப்படும். போதை பொருள்கள் எந்த விதத்தில் வந்தாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போதை மாத்திரைகளால் பள்ளி மாணவர்கள் பாதித்ததாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. அப்படி ஏதும் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

The post குஜராத் போதை மாத்திரை கும்பல் தலைவன் 24 மணி நேரத்தில் கைது: உதவியாக இருந்த மேலும் 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Gujrat ,Pallipalayam ,Namakkal district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...