×

கார் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

விருத்தாசலம், மார்ச் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சமியுல்லா மகன் தப்ரேஸ் அகமது(28). அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி அஜீரா(20), மாமனார் அக்ரம் பாஷா(50). மாமியார் ஷாஹினா (40), அவரது தாய் நஸ்ரின்(48) மற்றும் குழந்தைகள் உமேகுல்சும்(2), முகமது அஸ்லான்(3 மாத கை குழந்தை) ஆகியோரை தனது காரில் அழைத்துக் கொண்டு கடந்த 7ம் தேதி நாகூர் தர்காவிற்கு சென்றுள்ளார். காரை தப்ரேஸ் அகமது ஓட்டிச் சென்றுள்ளார். விருத்தாசலத்தில் இருந்து கம்மாபுரம் வழியாக விருத்தாசலம்-சிதம்பரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணியளவில் வி.சாத்தப்பாடி அருகே திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள்ளேயே அனைவரும் சிக்கி கத்தி கூச்சல் போட்டதை அறிந்த அப்பகுதியினர் ஓடி வந்து காருக்குள் இருந்த அனைவரையும் மீட்டனர்.

தொடர்ந்து கம்மாபுரம் காவல் நிலையம் மற்றும் விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ஷாஹினா (40) சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து தப்ரேஸ் முகமது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து அக்ரம் பாஷா மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்த போது சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். நஸ்ரின், அஜிரா மற்றும் குழந்தைகள் இருவர் என நான்கு பேர் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கார் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Vridthachalam ,Tabrez Ahmed ,Samiullah ,Kudiattam ,Vellore district ,Azira ,Akram Pasha ,Shahina ,Nasreen ,
× RELATED ₹18 கோடி மதிப்பில் நடந்து வருகிறது மந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி