×

பழநி கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடை எதிரொலி கோயில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கம்

பழநி, மார்ச் 8: பழநி கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் பயணிக்க இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் அமைந்துள்ள கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கிரிவீதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் கிரிவீதியில் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாதென கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.கிரிவீதிக்கு செல்லும் 9 வழித்தடங்களையும் கோயில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைத்து தடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவீதியில் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மற்றும் சுற்றுலா பஸ்நிலையங்களுக்கு செல்வதற்கு வசதியாக இலவச பஸ் கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. தவிர, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் செல்லும் வகையில் 3 பேட்டரி கார்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 

The post பழநி கிரிவீதியில் வாகனங்கள் செல்ல தடை எதிரொலி கோயில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Palani Giriveedhi ,Palani ,Palani Giriveedi ,Palani temple administration ,Dandayuthapani Swamy Temple ,Tamil Nadu ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...