×

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்க கூடிய விடியல் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட நாடாளுமன்ற தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு திடலில், சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து முத்து குமாரப்பா சாலையில் நடைபெற்ற விழாவில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற மாணவர்களுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம்‌ வழங்கினார்.

மேலும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் மூக்குக் கண்ணாடி மற்றும் மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் வழங்கி உரையாற்றினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்: அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதில் எனக்கு தனி மகிழ்ச்சி.  ஏனென்றால் என்னுடைய மனதிற்கு நெருக்கமாக நான் முதல்வன் திட்டத்திற்கு அடித்தளமாக அமைத்தது, இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தான் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அகடமி மூலம் இதுவரைக்கும் 10 பேட்ச் பெண்கள், ஆறு பேட்ச் ஆண்கள் என 816 பெண்கள் 444 ஆண்கள் 1260 பேர் இங்கு பயிற்சி பெற்று வேலைக்கு சென்று இருக்கிறார்கள்.

இங்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி வழங்குவதற்காக மட்டும் நான் வரவில்லை பல கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் தான் இங்கு வந்திருக்கிறேன். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துகிற திட்டங்களை செயல்படுத்தி கொளத்தூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கு எடுத்துக்காட்டாக இதை ஒரு மாடல் தொகுதியாக அனைவருக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மற்றவர்களையும் அழைத்து வந்திருக்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை மையம் மூலமாக 750 பேருக்கு மூக்குக் கண்ணாடியும் 250 பேருக்கு கல்வி கட்டணம் என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்திருக்கிறேன். இது கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் கழகத்தின் சார்பாக செய்யப்படுகிறது. இன்று மகளிர் தினம் அதற்கு முன்பு இத்தனை மகளிர் பயனடைய கூடிய திட்டங்களை வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைகிறைன்.

உங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்தி கொண்டிருக்கிறது‌. கட்டணம் இல்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி என மகளிர் காண திட்டங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை ஒன்றிய அரசினுடைய நிதியுதவியோ, ஒத்துழைப்போ இல்லாமல் தான் இத்தனை திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.

மேலும் தமிழ்நாட்டை வஞ்சிக்காத, மாநிலங்களை மதிக்கின்ற ஆட்சி அமைந்தால் தான் இன்னும் பல திட்டங்களை நாம் செயல்படுத்த முடியும். அதற்கு உங்களுடைய அனைவரின் ஆதரவும் தேவை. தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்க கூடிய விடியல் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட செய்திட வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 15 நபர்களுக்கு திருமண உதவித்து தொகையை வழங்கினார். பிறகு உழவர் சந்தை பகுதியில் பல்வேறு துறைகள் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

The post தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்க கூடிய விடியல் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட நாடாளுமன்ற தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும்: கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Kolathur ,CHENNAI ,M.K.Stalin ,Mayor ,Chitibabu Park ,Chennai Corporation ,
× RELATED வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை...