×

வணிக கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை கால அவகாசம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

வேளச்சேரி: வணிக கடைகளில் தமிழில் பெயர் பலகை மாற்றம் செய்வதற்கு ஏப்ரல் மாதம் வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். தரமணி, சிபிடி வளாகத்தில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனம், பேரறிஞர் அண்ணா கருத்தரங்கு கூடத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு, சங்கப்புலவர் கபிலர் நினைவாக தமிழ் வளர்ச்சித் துறையால் திருக்கோவிலூரில் நிறுவப்பட்டுள்ள நினைவுத்தூணை திறந்து வைத்தார்.

பின்னர், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பழந்தமிழர் இலக்கியங்களின் ஒலி நூல்கள் மற்றும் கவிஞர் தமிழ் ஒளி குறித்தான கவிஞர் தமிழ் ஒளியின் படைப்பு வெளி எனும் நூலினை வெளியிட்டார். இதனையடுத்து, தமிழ் பல்கலைகழகத்தில் கட்டப்பட்டுள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் பன்னோக்கு கூடம், உள்விளையாட்டு அரங்கம், கூடுதல் மகளிர் விடுதி, பழைய ஆடவர் விடுதி முதல் தளம் ஆகிய 4 கட்டிடங்கள் மற்றும் குறளோவியம் என்ற பெயரில் ஒலி-ஒளிப் பதிவு கூடம் ஆகியவற்றின் கல்வெட்டுகளை திறந்து வைத்தார்.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, நற்றமிழ் பாவலர் விருது, தூயத் தமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் இல.சுப்பிரமணியன் வாழ்த்துறை வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை ந.அருள் வரவேற்புரை ஆற்றினார். பின்னர், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் வைப்பது குறித்து ஏற்கனவே தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தொழிலாளர் துறை அமைச்சர், அதிகாரிகள், வணிகர்கள் அழைத்து பேசி இருக்கிறோம். ஒத்துழைப்பு தருவதாக வணிகர்கள் தெரிவித்தனர். மார்ச் 1ம் தேதி சென்னை மயிலையில் ஏற்கனவே ஆங்கில பெயர் பலகைகையை இறக்கிவிட்டு, தமிழுக்கான அங்கீகாரம் வழங்கக்கூடிய வகையில், அரசின் விதிமுறை உட்பட்டு பெயர் பலகை பொருத்துகிற பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, வணிக கடைகளில் தமிழில் பெயர் பலகை மாற்றம் செய்வதற்கு ஏப்ரம் மாதம் வரை கால அவகாசம் வழங்கபட்டுள்ளது. மே 1ம் தேதியில் இருந்து அரசு அறிவித்திருக்கிற அரசு விதிமுறைப்படி சூழ்நிலையை உருவாக்குவதற்கு இணைந்து பணியாற்றுவோம். ரயில் நிலையங்களில் படிவத்தில் தமிழ் இல்லாதது குறித்து கேட்டதற்கு, ஒன்றிய அரசின் அமைச்சருக்கு முதல்வர் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் அறிவுறுத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post வணிக கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க ஏப்ரல் வரை கால அவகாசம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,M. P. Saminathan ,Taramani ,World Institute of Tamil Research ,CPD ,Perarinar Anna Seminar Hall ,Tamil ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு