×

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: ரூ.300 காஸ் மானியம் நீட்டிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ரூ.300 காஸ் மானியத்தை உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், ஒன்றிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தேர்தலை குறிவைத்து சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரித்து 50 சதவீதமாக வழங்க ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 49.18 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்திற்காக ஆண்டுக்கு ரூ.12,869 கோடி செலவிடப்படுகிறது. தற்போது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட இருப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15,014 கோடியாக செலவு அதிகரிக்கும்.

இதே போல, கிராமப்புற மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு டெபாசிட் இல்லாத காஸ் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2016 மே மாதம் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து காஸ் மானியம் ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக ஒன்றிய அரசு அதிகரித்தது. இந்த மானிய உயர்வு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சுமார் 10 கோடி குடும்பங்கள் பயனடையும் என்றும், அரசுக்கு ரூ.12,000 கோடியாக செலவு அதிகரிக்கும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ரூ.300 மானியம் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகள் காஸ் சிலிண்டரை ரூ.603 விலைக்கு பெற்று வருகின்றனர்.  இதே போல, வரும் 2024-25ம் நிதியாண்டில் கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.285 உயர்த்தி ரூ.5,335 ஆக நிர்ணயிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் கிழக்கு மாநிலங்களில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறி உள்ளார். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்க ரூ.10,037 கோடியில் உன்னாட்டி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

The post மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு: ரூ.300 காஸ் மானியம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : union government ,Lok Sabha ,elections ,New Delhi ,Union Cabinet ,Lok Sabha elections ,Union ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...