×

மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள்: திரளான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் மாசி மாத அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டு, மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், உலக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர், கைலாசநாதர் ஆகிய கோயில்களில் மகாசிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது.

இதையடுத்து ஏகாம்பரநாதர் – ஏலவார்குழலி அம்பாளுக்கு கைலாசநாதர் – பர்வதவர்த்தினி அம்மன் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து கச்சபேஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், புண்ணியகோட்டிஸ்வரர், சித்தீஸ்வரர், முத்தீஸ்வரர், பிறவாதீஸ்வரர், ரவாதீஸ்வரர் நகர், நகரீஸ்வரர் மணிகண்டீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பணம் முடீஸ்வரர், அகத்தீஸ்வரர், லிங்கேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வேதபுரீஸ்வரர், குபேர லிங்கேஸ்வரர் என காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 127 சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

விழாவையொட்டி ஆறுகால பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அன்னதானங்கள் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டியம் உள்ளிட்ட ஆன்மீக நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும், சிவாலயங்களிலும் இரவு முழுவதும் சாமி வீதிஉலா நடைபெறுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வாழைமரம் தோரணம் கட்டி பக்தர்கள் வழிபட ஏதுவாக அனைத்து வசதிகளும் நிர்வாகத்தினரால் செய்யபட்டுள்ளது. மகா சிவராத்தியை முன்னிட்டு, நேற்று உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. கோயிலுக்கு, சிவபெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு‌ மாவட்ட கோயில்கள்: இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனை, அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வர் கோயில், செங்கல்பட்டு நகரில் உள்ள ஏகாம்பர ஈஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில், தாம்பரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருக்கச்சூர் ஈஸ்வரர் கோயில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட சிவன் கோயிலில் பால், நெய், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட 27 பொருட்களில் இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். இதனை பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து கண்டு களித்து சிவனை வழிபட்டனர்.

The post மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Shivalayams ,Maha Shivratri ,Kanchipuram ,Masi ,Lord Shiva ,Shivaratri ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...