×

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு பிறந்தது: பக்தர்கள் நெகிழ்ச்சி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு பிறந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். \”பட்சி தீர்த்தம்\” என்று அழைக்கப்படுகின்ற திருக்கழுக்குன்றத்தில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் முக்கிய தலமாக இது விளங்கி வருகிறது. வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்திற்கு சற்று அருகாமையில் ஒரு (சங்கு) தீர்த்த குளம் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் மார்க்கண்டேய முனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று சிவ பெருமானைக் கண்டு அபிஷேகம் செய்து, பாடி வணங்கி வந்த காலத்தில் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரை கண்டு அபிஷேகம் செய்து வணங்கிச் செல்ல இந்த தீர்த்த குளத்தில் குளித்து விட்டு மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு தீர்த்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்ய எண்ணினார்.

அப்போது அபிஷேகம் செய்ய தீர்த்த புனிதநீரை எடுத்துச் செல்ல பாத்திரம் ஏதும் இல்லாததால், சிவபெருமானிடம் மனமுருகி வேண்டியபோது அந்தத் தீர்த்தக் குளத்தில் மார்க்கண்டேய முனிவருக்காக ஒரு சங்கு பிறந்தது. இதனைக்கண்டு மகிழ்ந்த மார்க்கண்டேய முனிவர் அந்த சங்கின் மூலம் தீர்த்த நீரை எடுத்துச் சென்று மலை மீதுள்ள வேதகிரீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தார். மார்க்கண்டேய முனிவருக்காக தீர்த்த குளத்தில் சங்கு பிறந்ததால் அந்தக் குளம் \”சங்கு தீர்த்த குளம்\” என்று பெயர் பெற்றது. இதனைத் தொடர்ந்து முறையே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு பிறந்து வருகிறது. அதன்படி கடந்த 2011ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சங்கு பிறந்ததைத் தொடர்ந்து, 12 ஆண்டுகள் கழித்து நேற்று சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு பிறந்தது.

ளசங்கு பிறந்த தகவலையறிந்த திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து புதிய சங்கைக் கண்டு வணங்கிச் சென்றனர். காலை முதல் மாலை வரை பொதுமக்கள் சங்கை தரிசித்து வந்த நிலையில், மாலை சிவாச்சாரியார்கள், குருக்கள் மூலம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மேள, தாளங்கள், மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பக்தவச்சலேஸ்வரர் கோயிலுக்கு கொண்டு சென்று சங்கு வைக்கப்பட்டது. முன்னதாக புதிதாக பிறந்த இந்த சங்கை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி, செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரணீத், முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜி.டி.யுவராஜ் ஆகியோர் வணங்கிச் சென்றனர். இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலர் பிரியா, மேலாளர் விஜயன் ஆகியோர் பக்தர்கள் சங்கு தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

* குளத்தின் சிறப்புகள்
பொதுவாக சங்கு என்பது உப்பு நீரில் தான் பிறக்கும். ஆனால் உலகிலேயே நல்ல நீரான சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு பிறப்பது என்பது இங்கு மட்டும் தான். இது ஆன்மிக அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த சங்கு தீர்த்த குளத்தில் குளித்தால் சரும நோய், தோல் வியாதி போன்றவை குணமாகும் என்பது ஐதீகம். ஆன்மிக சுற்றுலா வரும் வட இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர், தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் இந்த சங்கு தீர்த்த குளத்தில் குளித்து விட்டு, இந்த நீரை புனித நீராக கொண்டு சென்று தங்கள் உறவினர்களுக்கும் கொடுப்பார்கள். இந்த வேதகிரீஸ்வரர் கோயில் கன்னி ராசிக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பகோணம் ”கும்பமேளா” போன்று இந்த சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ”புஷ்கர மேளா” எனப்படும் லட்சதீபத் திருவிழா நடப்பது வழக்கம்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்தக் குளத்தில் பிறக்கின்ற வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு, திரிசங்கு, திவி சங்கு, நாதசங்கு எனப்படும் வகைகளிலான சங்குகள் சுமார் 9 சங்குகள் தாழக்கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சங்குகள் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. அந்த மொத்த சங்குகளை கொண்டுதான் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமா வாரத்தில் (கடைசி திங்கட்கிழமை) வேதகிரீஸ்வரருக்கு 1008 மகாசங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. முறையே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறந்து வந்த நிலையில் 2011ம் ஆண்டுக்கு பிறகு 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்தாண்டு சங்கு பிறந்திருக்க வேண்டும்.
ஆனால் 12 ஆண்டுகள் கழிந்தும் சங்கு பிறக்காததால் பக்தர்கள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வந்த நிலையில் 6 மாதங்கள் தாமதமாகி நேற்று சங்கு தீர்த்தக் குளத்தில் சங்கு பிறந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு சங்கு பிறந்துள்ளதால் பக்தர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தனர்.

The post திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அதிசய சங்கு பிறந்தது: பக்தர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirukkalukunram ,Thirukkalukkunram ,Thirukkalukunram Sangu Theertha Pond ,Sangu ,Vedakriswarar mountain ,Patsi Theertha ,Shiva ,
× RELATED குடிநீர் பிரச்னை தொடர்பாக அமைதி...