×

கிரி வீதியில் கடைகள் அகற்றத்தை கண்டித்து பழநியில் கடையடைப்பு போராட்டம்: கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

பழநி: தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக பழநி அடிவாரத்தில் ஏராளமான கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, கிரி வீதிகளிலுள்ள வர்த்தக நிறுவனங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், கிரி வீதியில் வாகனங்கள் செல்வதை தடுக்கவும் வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேலும் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழுவையும் அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, ஐகோர்ட் கிளை உத்தரவின் பேரில் அடிவார பகுதியில் இருந்த 80க்கும் மேற்பட்ட கடைகள் கோயில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டன. இந்நிலையில், மேலும் 130க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கிரிவீதிக்கு செல்லும் 9 பாதைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடைகள் அகற்றம் மற்றும் கடைகள், குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதற்கும், கீரிவீதிக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பழநி அடிவார பகுதியிலுள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டன. கடைகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கிரி வீதி, அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதி, சன்னதி வீதி என அடிவாரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடியது. கடைகள் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் பூஜை பொருட்கள், உணவு பொருட்கள், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், இன்று முகூர்த்த நாள் என்பதால், திருஆவினன்குடி கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதற்கு வந்தவர்கள் சாப்பிடுவதற்கு ஓட்டல் இல்லாமல் அவதிப்பட்டனர்.

The post கிரி வீதியில் கடைகள் அகற்றத்தை கண்டித்து பழநியில் கடையடைப்பு போராட்டம்: கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Giri Road ,Palani ,Palani Thandayuthapani Swamy Temple ,Tamil Nadu ,Thiruthonda Sabha ,
× RELATED பழநியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு