- வேதகிரீஸ்வரர்
- கோவில்
- செங்கல்பட்டு
- திருப்பலுக்கன்ரம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- அருள்மிகு திரிபுரசுந்தரி
- உடனுறை
- வேதகிரிஸ்வரர்
- சுவாமி
- குரு பகவான்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற சமய குரவர்கள் நால்வர்களால் பாடல்பெற்ற திருக்கோயிலாகும். மலையில் அமையப்பெற்ற இத்திருக்கோயிலில் அருள்மிகு வேதகிரீஸ்வரர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
இத்திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசிக்கு பிரவேசிக்கும் தினத்தில் சங்கு தீர்த்த புஷ்கரா மேளா – இலட்சதீபப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். மார்க்கேண்டய ரிஷி அனைத்து சிவத்தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு வேதகிரீஸ்வரரை வணங்கி, பிராத்தனை செய்ய வந்தபோது பூஜை செய்வதற்கான எந்தவித பாத்திரங்களும் இல்லாததால் இறைவனை நோக்கி தவம் செய்த மார்கேண்டய மகரிஷி புனித குளத்தில் சங்கு ஒன்றினை தோற்றுவித்தாக புராணங்கள் கூறுகின்றன.
அன்று முதல் இக்குளம் சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தீர்த்த குளத்தில் பிறக்கும் சங்கினை கொண்டு கார்த்திகை மாதம் கடைசி சோமவாரம் தினத்தன்று திருமலை சுவாமிக்கு 1008 மகா சங்காபிஷேகம் நடைபெறும். கடைசியாக கடந்த 01.09.2011 விநாயகர் சதுர்த்தி அன்று இத்திருக்குளத்தில் புனித சங்கு தோன்றியது.
12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது மேற்படி குளத்தில் இன்று (07.03.2024) காலை 9.15 மணியளவில் சங்கு பிறந்துள்ளதாக திருக்கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் / பொதுமக்களால் தகவல் அளிக்கப்பட்டது. திருக்கோயில் செயல் அலுவலர், சிவாச்சாரியார்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக திருக்குளத்திற்கு சென்று புனித சங்கினை தாம்பாளத்தில் வைத்து திருக்கோயில் மாசி மக மண்டபத்தில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி புனித சங்கிற்கு திருக்கோயில் பழக்கவழக்கத்தின்படியும், ஆகம முறைப்படியும் பூஜைகள் செய்து, இன்று (07.03.2024) மாலை 4.00 மணியளவில் பாதுகாப்புடன் திருக்குளக்கரையிலுள்ள மாசி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மாடவீதிகளில் வலம் வந்து திருக்கோயிலில் வைக்கப்படும். இப்புனித சங்கினை தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிடலாம் என திருக்கோயில் செயல் அலுவலர் அ.பிரியா தெரிவித்துள்ளார்.
The post செங்கல்பட்டு வேதகிரீஸ்வரர் கோயிலில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட புனித சங்கு appeared first on Dinakaran.