×

பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்: 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி

கோவை: மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், ”சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன்.

காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த்து” என கூறினார்.

சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், ”சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது” என்றார்.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.

The post பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த சிவ பக்தர்கள்: 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி appeared first on Dinakaran.

Tags : Shiva ,Isha ,Adiyogi Ter Bhavani ,Nayanmar ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Uttar Pradesh ,Koi ,Isha Yoga ,Centre ,Mahashivratri ,Chennai ,Bangalore ,Nagarkovil ,Patukkottai ,Pollachi ,Goa ,Adiyogi ,Ter Bhavani ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...