×
Saravana Stores

கம்பம்மெட்டு சாலையில் வாகனங்களை அனுமதிக்க கோரி பைபாஸ் சாலையில் தொழிலாளர்கள் மறியல்

கூடலூர், மார்ச் 7: கம்பம்மெட்டு சாலையில் வாகனங்களை அனுமதிக்க கோரி பைபாஸ் ஆலையில் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தை இணைக்கும் சாலையாக கம்பம்மெட்டு சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கம்பம்மெட்டு, கேரளாவில் உள்ள கட்டப்பனை, நெடுங்கண்டம், இடுக்கி செல்லும் சரக்கு வாகனங்களும், பஸ் உள்ளிட்ட தோட்டத்தொழிலாளர்கள் செல்லும் வாகனங்களும் செல்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பில் இந்த சாலை உள்ளது. கம்பத்தில் இருந்து மலையடிவாரம் சென்று, அங்கிருந்து

7 கிலோ மீட்டர் தூரம் கம்பம் மேற்கு வனச்சரகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வழியாக மெட்டு சாலை செல்கிறது. இதில் அபாயகரமான 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில் 18வது கொண்டை ஊசி வளைவு அருகே, சுமார் 200 மீ வரை உள்ள மலைச்சாலை பருவமழை காரணங்களாலும், சாலையில் அவ்வப்போது ஏற்படும் நீரூற்றுகளாலும் அடிக்கடி சேதம் அடைந்தது. இதனால், இப்பகுதியில் மட்டும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இச்சாலை பகுதி சேதமடைவதை தவிர்க்க நிரந்தர தீர்வாக பேவர் பிளாக் பதித்து சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு கம்பம்மெட்டு மலைச்சாலையில் கடந்த பிப்.24 முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் அனுமதியும், கார், சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப் பட்டது. இதனால், கம்பம்மெட்டு வழியாக கேரளப் பகுதிக்கு சென்ற வாகனங்களும், தோட்டத் தொழிலாளர்களின் நூற்றுக்கணக்கான வாகனங்களும் குமுளி வழியாகச் சென்றன. இதனால், குமுளி மலைப்பாதையிலும், குமுளி நகரிலும் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிப் 24ல் தொடங்கிய பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், சாலை சீரமைப்பு செய்தபின்பும் தொழிலாளர்கள் வாகனங்களை அனுமதிக்க வில்லை என்று கூறி, இன்று காலை வாகங்களுடன் கம்பம்மெட்டு ரோடு பைபாஸ் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவல்தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து காவல்ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நெடுங்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி, கனரக வாகனங்கள் தவிர்த்து மற்ற பைக், கார், ஜீப் செல்ல அனுமதி அளித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சாலை சேதமடைந்த பகுதி பேவர்பிளாக கல் பதித்து சீரமைக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் தண்ணீர் செல்லும் கால்வாய் பகுதியில் சிமென்ட் பூச்சு உலரவேண்டி உள்ளது. பணி முடிந்த உடனே கனரக வாகனங்கள் சென்றால் இது மீண்டும் சேதமடையும் என்பதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தொழிலாளர்கள் கோரிக்கையால், இன்று காலை முதல் நன்குசக்கர வாகனங்கள் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. விரைவில் கனரகவாகனங்கள் அனுமதிக்கப்படும்’ என்றனர்.

The post கம்பம்மெட்டு சாலையில் வாகனங்களை அனுமதிக்க கோரி பைபாஸ் சாலையில் தொழிலாளர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Kampammettu road ,Koodalur ,BYPASS ,Kambammetu road ,Theni District ,Gampath ,Idukki District ,Kerala ,Bypass Road ,Kampammetu Road ,Dinakaran ,
× RELATED நெல்லை – நாகர்கோவில் – தென்காசி –...